R News
Headlines News :
Powered by Blogger.

Latest Post

தற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் இல்லை. சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள் : பொன்சேகா

Written By Unknown on Friday, July 5, 2013 | 5:12 PM

தற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் இல்லை. சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று (05) மதியம் 11.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்காத பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஹோட்டல் நடத்தப்படுவதாக தெரிவித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா தனக்கு இராணுவத்தினரால் நடாத்தப்படும் ஹோட்டல் பற்றி எதுவும் தெரியாது என தெரிவித்தார். 

மேலும் தான் இராணுவ தளபதியாக இருந்த போது இராணுவத்தினரால் நடாத்தப்படுகின்ற சிற்றுண்டிசாலைகளை விரும்பவில்லை எனவும் தற்போது இராணுவத்தில் உள்ளவர்கள் இராணுவத்திற்கு தகுதியானவர்கள் இல்லை எனவும் இவ்வாறு சிற்றுண்டிச்சாலை நடத்துவதற்கும் ஹோட்டல் நடத்துவதற்குமே தகுதியானவர்கள் எனவும் தெரிவித்தார். 

யாழில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் எனவும் உயர் பாதுகாப்பு வலயம் என்பது அகற்றப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார். 

ஒழிப்பதும் குறைப்பதும் இனவாதம்

இலங்கையின் நீண்ட காலமாக நிலவிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியப் பிரதமர்  ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் 1987  ஜூலை மாதம் 29 ஆம் திகதி மேற்கொண்ட எழுத்து மூலமான ஆவணமே இலங்கை  இந்திய ஒப்பந்தம் இராணுவம் ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கை மூலம் வட மராட்சிப் பிரதேசத்தை கைப்பற்றிய போது இந்திய அரசு  தலையீடு  செய்து யுத்தத்தை நிறுத்தியதோடு தொடர்ந்து இராஜ ரீக நெருக்குவாரங்களைக் கொடுத்து ஒப்பந்தத்திற்கு இலங்கை ஜனாதிபதியை சம்மதிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.
 இவ் விடயத்தில் இந்தியாவின் அக்கறை துடிப்பு என்பவற்றை மிக சாணக்கியமாக பயன்படுத்தி ஒப்பந்தம் செய்த ஜே.ஆர். இதனை 1918 இல் சோவியத் ஒன்றியம், ஜேர்மனுடன் செய்த Brest Litovsk ஒப்பந்தத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். வடக்கு, கிழக்கை நிரந்தரமாக இணைக்க மறுத்த ஜே.ஆர். தற்காலிக இணைப்புக்கே ஒப்புக் கொண்டார். விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வடக்கு  கிழக்குப்பிரதேசத்தில் வந்திறங்கிய இந்திய அமைதி காக்கும் படைக்கும், விடுதலைப்  புலிகளுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தி யுத்தத்தை உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் மூலோபாயமாக விருந்தது.
இலங்கை  இந்திய ஒப்பந்தத்தையடுத்து சுதுமலையில் நடைபெற்ற மாபெரு ம் மக்கள் கூட்டத்தில் தோன்றிய  பிரபாகரன் இந்தியாவின் புவிசார் அரசியலையும் அதனுடன் தொப்புள் கொடி உறவாக பிணைந்து நிற்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் கருத்தில் கொண்டு இந்திய இராணுவ வீரனுக்கு எதிராக ஆயுதம் தூக்கமாட்டோம் எனப் பேசினார்.  அடுத்து 1987 ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணக் குடா நாட்டில் சிறு கலந்துரையாடல்களில் பங்கு கொண்டு தமது நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னார்.
அந்த வகையில்  சாவகச்சேரியில் ஒரு கூட்டத்தில் பங்கு கொண்ட பிரபாகரன் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்  நிரந்தரமாக  இணைக்கப்படும் எனவும் காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் புனர்வாழ்வுக்கான நிதியை இந்திய அரசாங்கம் தருமெனவும் ராஜீவ் காந்தி  உறுதி அளித்துள்ளதால் வடக்கு, கிழக்கு நிர்வாகத்தை ஏற்பதெனவும் ஜே.வி.பி. தென்னிலங்கையில் ஒப்பந்தத்திற்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்ய அது எமக்கு சாதகமாக அமையும் எனவும் கூறினார். பின்னர் செப்டெம்பர் 15 ஆம் திகதி அரசியல்   பொறுப்பாளர் திலீபன் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து சாகும் வரை உண்ணா  நோன்பிருந்து உயிர் நீத்தார். அடுத்து ஒக்டோபர் மாதம் குமரப்பா,  புலேந்திரன் உட்பட பன்னிருவர் கடலில் ஆயுதங்களுடன் பிடிபட்டு பேச்சு வார்த்தை  பயன் அளிக்காத நிலையில் தங்கள் விதிமுறைகளுக்கு அமைய சயனட் உண்டு மரணித்தார்கள்.
 ஜே. ஆரின் முலோபாயம் நிறைவேறியது. ஒக்டோபர் 10 இல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி  காக்கும் படைக்கும் இடையே யுத்தம் மூண்டது. அப்போது ஜே.ஆர். ஒரு பேட்டியில் இலங்கை ஆளணி மற்றும் நிதி விரயமாகாமல் யுத்தத்தை செய்கின்றேன் என்றார்.
1985 களில் ஏற்பட்ட ஈழ தேசிய விடுதலை முன்னணி போன்று தொடர்ந்து இயக்கங்கள் யாவும் ஐக்கியப்பட்டு கூட்டுத் தலைமையின் கீழ் போராடியிருந்தால் இந்திய  இலங்கை ஒப்பந்தமே ஏற்பட்டிருக்காது. சகோதார இயக்க சிக்கல்கள் , முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது. மாறாக நிலைமை வேறாக அமைந்திருக்கும். இலங்கை  இந்திய ஒப்பந்தம் இந்திய இராணுவத்தின் வருகை 13 ஆவது திருத்த சட்டம் என்பவற்றையும் காரணங் காட்டி 1988, 1989 களில் ஜே.வி.பி.  தென்னிலங்கையில் கிளர்ச்சியில் ஈடுபட்டது. இவற்றை இலங்கை மீதான  இந்தியாவின்  விஸ்தரிப்பு வாதம் என்றே ஜே.வி.பி. (மக்கள் விடுதலை முன்னணி )  பிரசாரம் செய்தது.
  ஜே.வி.பி. யின் ஐந்து கோட்பாடுகளில் இந்திய விஸ்தரிப்பு வாதமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஏற்றுக் கொண்ட குறிப்பிட்ட சிங்கள இளைஞர்கள் ஜே.வி.பி. தலைவர் றோகண விஜய வீரவை ஒரு தீர்க்க தரிசி என்றே அழைத்தார்கள். அதன் ஒரு பக்க வெளிப்பாடே இன்றைய தேசிய சுதந்திர விடுதலை முன்னணி (விமல் வீரவன்ச) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற  இனவாத அமைப்புகளாகும்.
இவ்வாறான துன்பியங்கள் மத்தியிலேயே 1988 இல் 13 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு மாகாண  சபைகள்  உருவாக்கப்பட்டன. வடக்கு, கிழக்கில் தொடர்ந்து யுத்தம் நடைபெற்றமையும் , 1991 இல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமையும் பெரும் தாக்கத்தினை  ஏற்படுத்தியது. இந்திய , இலங்கை  தொடர்பாக தனது கொள்கையை மாற்றிக் கொண்டது.  ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்தச் சட்டம் மாகாணங்களின் சுயாட்சிக்கான போதிய அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது பொதுவான மனக்குறையாகும். இதனால் பின்னர் வந்த அரசாங்கங்கள் மங்கள முனசிங்க அறிக்கை ,பிராந்தியங்களின் ஒன்றியம் எனும் சந்திரிக்காவின் தீர்வுப் பொதி ஒஸ்லோ பிரகடனம்  திஸ்ஸ விதாரண அறிக்கை என பல வெளியிடப்பட்டன.  ஆனால்,   இவை ஒன்றும் அமுலுக்கு வரவில்லை.
இலங்கை இனப் பிரச்சினை வரலாற்றில் இலங்கை இந்திய ஒப்பபந்தத்தின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டமே அமுலுக்கு வந்து எவ்வளவோ  போராட்டங்கள் மத்தியில் உயிரோடு தப்பிப் பிழைத்திருக்கின்றது. இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசுபவர்களின் பாரம்பரிய பிரதேசம் எனவும் வடக்கு, கிழக்கு இணைப்பையும் உறுதி செய்த படியால் ஏனைய தமிழ் அமைப்புக்கள் அதனை ஏற்றுக் கொண்டு  ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசித்தார்கள். ஆனால், விடுதலைப் புலிகளோ இந்திய  இலங்கை ஒப்பந்தம், சந்திரிகாவின் தீர்வுத்திட்டம்,  ஒஸ்லோ பிரகடனம்  தொடர்பான பேச்சு வார்த்தைகளை முறையாகப் பயன்படுத்தாமல் இராணுவ  வழிவகை மூலம்  தமிழ் ஈழத்தை அடைவதே தமது தாகமாக செயற்பட்டார்கள்.
ஆயுதமேந்திப் போராடி 28 வருடங்கள் சிறைவாசம்  அனுபவித்த நெல்சன் மண்டேலா விடுதலையாகி பிரதமர்  கிளார்க் உடன் பேச்சு வார்த்தை செய்து இருவரும் வெற்றி கண்டார்கள்.  இதனைப் பிரபாகரன் , சந்திரிகா வுடன் பரீட்சித்து வெற்றியடையந்திருக்கலாம். இதுவே தலைமைத்துன வேறுபாடு.
இது இவ்வாறிருக்க வட மாகாண சபைத் தேர்தல் என்றதும் சிங்களத் தீவிர வாத அமைப்புகள் 13 தொடர்பாக புதுப் புது வியாக்கியானங்களை முன் வைக்கின்றார்கள். 13 இலுள்ள அதிகாரங்களைக் குறைக்க  வேண்டும் அல்லது 13 இணையே இல்லாதொழிக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்துகின்றார்கள். தமிழ்க் கட்சி என்றோ 13 ஆம் திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்ப புள்ளியாகவோ, இடைக்கால தீர்வாகவோ இறுதித் தீர்வாகவோ அமைய முடியாது என்கின்றது.
இயற்கை விஞ்ஞானத்தில் கருதுவோர், கோட்பாடு , விதி , உண்மை என்றவாறே வளர்ச்சிப் படிநிலை   உள்ளது.   ஒரு விஞ்ஞானி  தனக்கு முன்பிருந்த விதி, உண்மைகளில் இருந்தே புதிய கருதுகோளை உருவாக்கி  உண்மையைக் கண்டுபிடிக்கின்றார்.அவ்வாறே அதிகராப்  பகிர்வு தொடர்பாக இருக்கின்ற ஒரேயொரு சட்டம் இதுவே. இதனை  ஒன்றில் முழுமைப்படுத்த வேண்டும் அல்லது  இதனிலும் வலிதான மாற்றுத் தீர்வை முன்வைக்க வேண்டும். மாறாக 13 இணைக் குறைப்பதோ ,ஒழிப்பதோ  எதிர்மறையான ஜனநாயக விரோத இனவாதச் செயற்பாடாகும். எனவே தமிழ் , முஸ்லிம் மக்கள் அவர்களின் பிரதிநிதிகள் தென்னிலங்கை  ஜனநாயக வாதிகள்  , இடதுசாரிகள், புத்திஜீவிகள்  ,தொழிற் சங்கங்கள் என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டு  அயல் நாடுகள் மற்றும் சர்வதேசத்தின் அணுசரணையுடன் 13 இன் மேல் புதிய தீர்வு ஒன்றை உருவாக்கப் போராட வேண்டும். 

பி. முத்துலிங்கம்
ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் 


அமெரிக்காவின் இராஜதந்திர மிரட்டல்

அமெரிக்க தேசிய புலனாய்வு பிரிவுக்கு (NSA) தகவல் தெரிவிப்பவரான எட்வார்ட் ஸ்னோவ்டெனை பிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, ஹொங்கொங் மற்றும் ஈக்வடோரை ஒபாமா நிர்வாகம் இராஜதந்திர முறையில் அச்சுறுத்தவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டமில்லாத தன்மையை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகை, ஸ்னோவ்டென் அமெரிக்காவில் ஒற்றாடல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவருடைய ஒரே குற்றம் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் எதிராகவும் உலகிலுள்ள மக்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராகவும்  அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தையும் மீறி நடக்கும்  அமெரிக்க தேசிய புலனாய்வு பிரிவுக்கு (NSA)யின் பாரிய மின்னியல் வேவு செயற்பாடுகளை அம்பலப்படுத்தியதுதான்.
அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி ரஷ்ய அரசாங்கம் "சட்டத்தின் தரங்களின்படி' நடந்து கொள்ள வேண்டும் என்று கோரினார். மாஸ்கோ நம் விருப்பங்களை மதிக்கவில்லை என்றால், ஸ்னோவ்டென் விமானத்தில் விருப்பத்தின்படி ஏற அனுமதிக்கப்பட்டால், என்னவென்று குறிப்பிடாத விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று அச்சுறுத்தினார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இதற்கு விடையளிக்கையில் அரசாங்கம் ஒரு தப்பியோடுபவருக்கு உதவுகிறது என்ற வாஷிங்டனின் குற்றச்சாட்டுகளை பிதற்றல்கள், அபத்தம் என்று உதறித் தள்ளினார். அவர் மாஸ்கோ Sheremetyevo விமான நிலைய வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய போக்குவரத்து பகுதியில் தற்போது (கட்டுரை எழுதும் போது) நிற்கும் ஸ்னோவ்டென் ரஷ்யாவிற்குள் நுழையவில்லை என்றும் எந்த ரஷ்ய சட்டத்தையும் மீறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அமெரிக்கா, ரஷ்யாவுடன் குற்றவாளிளை வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் உடன்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை.
அமெரிக்கக் கோரிக்கைகள் பெருகிய வெறித்தனம் மற்றும் அச்சுறுத்தல்களுடன் பொறுப்பற்ற முறையில் அத்தனை திசைகளிலும் வீசப்படுகின்றன. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே.கார்னே அமெரிக்கப் பதிலடி கிடைக்கும் என சீனாவை எச்சரித்து,  ஸ்னோவ்டெனை ஹொங்கொங்கில் இருந்து மாஸ்கோவிற்குப் பறக்கவிட்டது கேள்விக்கிடமின்றி எதிர்மறைப் பாதிப்பை உறவுகளில் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
சீன வெளியுறவு அமைச்சரகம், அமெரிக்கக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என நிராகரித்து ஹொங்கொங் நிர்வாகம் சட்டப்படி செயற்பட்டது என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் Peopl‘s Daily கூறியதாவது ;  உலகம் எட்வார்ட் ஸ்னோவ்டெனை நினைவிற்கொள்ளும். அவருடைய அச்சமின்மைதான் வாஷிங்டனின் போலிப் புனித முகமூடியைக் கிழித்தெறிந்துள்ளது. சட்டத்தின் தரங்கள் மற்றும் சட்ட வழிவகைகளுக்கு ஒபாமா நிர்வாகத்தின் முறையீடுகள் என்பது முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். வெள்ளை மாளிகை அங்கீகரிக்கும் ஒரே சட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல், பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு உதவுபவைதான். அதன் ஒருதலைப்பட்ச ஆணைகளுக்கு கீழ்ப்படியவில்லை என்றால் விளைவுகள் இராஜதந்திர, பொருளாதார பதிலடி அல்லது இன்னும் மோசமாக இருக்கும். அது நிலை நிறுத்துவது ஒன்றும் சட்டத்தின் ஆட்சி அல்ல, காட்டாட்சி என்பதுதான் சரியாகும்.
சம்பவம் வேறு வகையில் இருந்திருந்தால்  ஒரு சீன அல்லது ரஷ்ய அதிகாரி அமெரிக்காவிற்கு அந்நாடுகளில் இருக்கும் பொலிஸ் அரச நடவடிக்கைகளின் எல்லையை வெளிப்படுத்தும் தகவல்களை ஒரு கணினி முழுவதும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தால் ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பை கற்பனை செய்வது கடினம் அல்ல. அவனை அல்லது அவளை இருகைகள் நீட்டி வரவேற்றிருக்கும். வீரம் செறிந்த அரசியல் எதிர்க்கருத்துடையவர்கள் எனப் பாராட்டி முழுப் பாதுகாப்பை வழங்கியிருக்கும்.
கெர்ரி, கார்னே இருவருமே ஸ்னோவ்டெனை ஜனநாயகச் சுதந்திரம் இல்லாத நாடுகளில் தஞ்சம் நாடுவதற்குக் கண்டித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவில் என்ன நடக்கிறது? ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியது  ஒரு பாரிய பொலிஸ் அரச எந்திரம் நிறுவப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக அரசியலமைப்பை மீறி எந்த அளவுக்கு செயற்பட்டு வருகிறது என்பதைத்தான். இதன் நோக்கம் ஒன்றும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பது அல்ல, ஒரு சிறிய பெரும் செல்வம் படைத்த நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதுதான்.
கார்னே ஒரு படி மேலே சென்று ஸ்னோவ்டென் சீனாவையும் ரஷ்யாவையும் விமர்சிக்கத் தவறியது, "அவருடைய உண்மையான உந்துதல் எப்பொழுதும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவது என்பதுதான்' என்பதை நிரூபிக்கிறது என அறிவித்தார். ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளரும் ஸ்னோவ்டென் பற்றிய அமெரிக்க விமர்சகர்கள், அரசியல்வாதிகளின் எண்ணக்கணக்கற்ற "தேசத்துரோகி' கண்டனங்களுடன் சேர்ந்திருப்பது, வெள்ளை மாளிகையே அவர் அமெரிக்காவில் ஒரு நியாயமான விசாரணையைப் பெறுவார் என்னும் சாத்தியத்தை அகற்றிவிட்டது.
விக்கிலீக்ஸின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க்குற்றங்கள், இராஜதந்திர சதிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்திய பிராட்லி மானிங் போல் ஸ்னோவ்டெனும் அமெரிக்காவில் நீதியைப் பெறமாட்டார். அவர் வினாவிற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் ஒரு நீண்ட சிறைத் தண்டனை பெறுவார். அல்லது கங்காரு நீதிமன்றம் மூலம் மரணதண்டனை பெறுவார். எவ்வாறான வரைமுறையின் கீழும் ஸ்னோவ்டென் ஓர் அரசியல் வேட்டையாடலில் இருந்து தப்பியோடுகின்றார். இது சர்வதேச சட்டத்தின்படி தஞ்சம் வழங்கப்படுவதற்கான ஓர் தகுதியாகும்.
செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்கா அதன் போர் விமானங்களைப் பயன்படுத்தி ஸ்னோவ்டெனை ஏற்றிச் செல்லும் ரஷ்யாவின் பயணிகள் ஜெட் விமானத்தை கட்டாயமாக நிறுத்தி அவரைக் கொடுக்குமாறு வற்புறுத்துமா எனக் கேட்கப்பட்டதற்கு, கார்னே கொடுத்த பதில் ஒபாமா நிர்வாகத்தின் குற்றம் சார்ந்த தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஸ்னோவ்டென் குறித்ததினம் அக்காரணத்தினால் கியூப விமானத்தில் ஏறவில்லை என ரஷ்ய ஊடக அறிக்கைகளில் எழுதியிருந்தது பற்றி கருத்துத் தெரிவிக்குமாறு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மூன்று முறை கேட்கப்பட்டார். கார்னே அந்த விருப்பத் தேர்வை நிராகரிக்கவில்லை.
வெள்ளை மாளிகையில் இருக்கும் குண்டர்கள் மீறாத எந்தச் சட்ட வழிகளும் கிடையாது. அமெரிக்கா பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற போலிப் பிரசாரத்தின் கீழ் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா மீது ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தியுள்ளது. இப்பொழுது சிரியா, ஈரானுக்கு எதிராக அதையே செய்ய தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளது. இக்குற்றத்திற்காகத்தான் நாஜித் தலைவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் விசாரணைக்கு உட்பட்டு தண்டிக்கப்பட்டனர். குவான்டநாமோ குடாவில் கைதிகளை காலவரையறையற்று விசாரணையின்றிக் காவலில் வைத்திருப்பது அடிப்படை ஜனநாயக உரிமைகள் பற்றிய எத்தகைய கருத்தாய்வையும் மீறுவது ஆகும்.
ஆபத்து ஏற்படலாம் என்று ஸ்னோவ்டென் அஞ்சுவதற்கு தக்க காரணம் உள்ளது. அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தல் என அது கருதும் எவரையும் தேடிக் கொலை செய்யும் உரிமையை ஒபாமா நிர்வாகம் தனக்கே எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்க  குடிமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யேமன் இன்னும் உலகின் பல பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச சட்டத்திற்கும் தேசிய இறைமைக்கும் காட்டப்படும் இதே இழிவுணர்வுதான் ஸ்னோவ்டெனை ஒப்படைக்குமாறு ரஷ்யா, சீனாவை மிரட்டும் முயற்சிகளிலும் வெளிப்படையாக  உள்ளது. கருத்துப் பரிமாற்றங்களில் இருக்கும் சீற்றங்கள், மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு தலையீடுகள் தோற்றுவித்துள்ள தீவிர அழுத்தங்களுக்கு நிரூபணம் ஆகும்.
அவற்றை அமெரிக்கா செய்வதற்குக் காரணம் அதன் உலக மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும் சீனா, ரஷ்யா எனக் குறிப்பாக அதன் போட்டி நாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் விரும்புகிறது. ஸ்னோவ்டென் குறித்த மோதல், அமெரிக்கா எத்தகைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாது என்பதற்கும் தன் நலனுக்காக உலகைப் போரில் தள்ளவும் தயாராக உள்ளது என்பதற்கும் மற்றொரு எச்சரிக்கை ஆகும்.
அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும்,  இளைஞர்களும் ஸ்னோவ்டெனையும் அதேபோல் மானிங்,விக்கிலீக்ஸின் நிறுவனர் அசாஞ்சே ஆகியோரையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். பணியிடங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் தொழிலாளவர்க்க மக்கள் வாழும் இடங்களில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆதரவு கட்டமைக்கப்பட வேண்டும். ஸ்னோவ்டெனுக்கு எதிரானஅனைத்துக் குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும். மற்றும் அமெரிக்க ஒற்று நடவடிக்கைகள் குறித்த அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட வேண்டும். அடிப்படை ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படல் என்பது போர், சிக்கனம் மற்றும் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனத்தை விளைவாக்கும் திவாலான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு சோசலிச மாற்றீட்டை வழங்கும் சர்வதேச தொழிலாளவர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்கும் பரந்த போராட்டத்துடன் பிணைந்துள்ளது.


உலக சோசலிச இணையத்தளத்திலிருந்து


42 மனைவிகளுடன் வடிவேலு

திரையுலகிற்கு ரீஎண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு நடித்து வரும் புதிய படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் தெனாலிராமன் கெட்டப்பில் வடிவேலு நடித்த முதல் காட்சியை படமாக்கினர். இக்காட்சியில் அவருக்கு 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி உள்ளனர். குறிப்பாக இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்ட வடிவேலு, தன் அம்மாவை பார்ப்பதற்காக மதுரைக்கு சென்று விட்டாராம். 

13 வயது மாணவி கர்ப்பம் காரணமான இளைஞன் கைது

கொழும்பு மோதரை பகுதியைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவியை ஏழு மாத கர்பிணியாக்கிய 19 வயதுடைய இளைஞன் ஒருவரை கடந்த 2 ஆம் திகதி மோதரை பொலிஸார் கைது செய்துள்ளதாக நிலையப் பெறுப்பதிகாரி பிரதான இன்ஸ்பெக்ரர் நிலுபுல் தெரிவித்தார்.
சந்தேக நபரும் இந்த மாணவியும் காதலர்கள் எனவும் மாணவி வீட்டில் தனிமையில் இருந்த வேளø சந்தேக நபர் மாணவியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கியதாக நிலையக் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சம்பத் பத்மலாத் தெரிவித்தார்.
மாணவியான தன் மகள் கர்ப்பமடைந்ததை அறிந்த பெற்றோர் பிரதேச வாசிகள் இதனை அறிந்து விடுவார்கள் எனப் பயந்து வேறு பகுதியில் விடொன்றில் மகளை வைத்து பாதுகாத்ததாக இன்ஸ்பெக்ரர் பத்மயால் தெரிவித்தார்.
ஏழு மாதம் நிறைந்த கர்ப்பிணி மாணவியை அரச வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்றால் வைத்தியர்கள் கேள்வி கேட்பார்க்ள எனப்பயந்து தனியார் வைத்திய நிலையம் ஒன்றிற்குக் கூட்டிச் சென்றதாகவும் அந்த வைத்திய நிலைய வைத்தியர் பொலிஸ் சான்றிதழ் கொண்டுவருமாறு கூறியதைத் தொடர்ந்து பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டதை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பத்மலால் தெமரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் இந்த யுவதியை திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் சந்தேக நபர் 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பமடைய செய்ததால் சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் இன்ஸ்பெக்ரர் பத்மலால் தெரிவித்தார்.


புகலிடக் கோரிக்கை பேச்சுகளுக்காக கெவின் ரூட் இந்தோனேஷியா விஜயம்

கன்பேரா: புகலிடக் கோரிக்கை கொள்கை குறித்த பேச்சுகளில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இந்தோனேஷியாவுக்கான  விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் தலைமைத்துவத்தினை தீர்மானிக்கும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம் ஜூலியா கிலார்ட்டை பதவி நீக்கம் செய்து பிரதமராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார் கெவின் ரூட்.
இந்நிலையில், இந்தோனேஷியாவுக்கு விஜயம் செய்யும் ரூட் ஜனாதிபதி  சுசிலோ பம்பங் யுதோயோனோவுடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார். இவ்வருட இறுதியில் நடைபெறும் அவுஸ்திரேலிய தேர்தல்களில் புகலிடக் கோரிக்கை விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தோனேஷியா ஊடாக அவுஸ்திரேலியாவை வந்தடையும் படகு  அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.  இலங்கை, ஈரான் , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே பெருமளவில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி படகுகள் மூலம் வருகை தருகின்றனர்.
இவ்வாறு படகுகள் மூலம் வருகை தருவோர் இந்தோனேஷியா ஊடாக அவுஸ்திரேலியாவின் மிலக்கிட்டிய பிராந்தியமான கிறிஸ்மஸ் தீவினை வந்தடைகின்றனர். இதனால், இவ்வாறு கிறிஸ்மஸ் தீவினை வந்தடைவோரை நௌரு மற்றும் பபுவா, நியூ கினியா ஆகிய இடங்களுக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசு கடந்த வருடம் முடிவு செய்திருந்தது. 

வட மாகாண தேர்தலுக்கு ஜனாதிபதி அனுமதி

வட மாகாண சபை தேர்லை நடத்துவதற்கான அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ளார்.
அத்துடன்  வடமேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 விவகாரம்; இந்தியா அதிருப்தி: நாராயணசாமி

'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய இந்தியா அனுமதிக்காது. இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது' என்று இந்திய பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 'மாகாண சபைகளை நிறுவுவதற்காகவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்காகவும் இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையையும் திருத்தச் சட்டத்தையும் இலங்கை அரசு ஒருதலைபட்சமாக திருத்த முடியாது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது. இது இலங்கை அரச தரப்பினரிடம் பல முறை கூறப்பட்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனா ஆகியோரிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்டத் திருத்தமும் நீர்த்துப் போக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது' எனவும் அவர் கூறியுள்ளார். 'இலங்கை அரசு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்து அதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளது என்பதே, அந்தச் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவால் பார்க்கப்படுகிறது' என்றும் அமைச்சர் நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார். 'சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கூட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அதிகாரப் பகிர்வை கொண்டுவரும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் நாராயணசாமி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (பி.பி.சி)

அதிகாரப்பறிப்பு: தடுமாறுகிறதா அரசாங்கம்?

Written By Unknown on Sunday, June 30, 2013 | 4:06 PM


மாகாணசபைத் தேர்தலும் 13ஆவது திருத்தச்சட்ட விவகாரமும், இப்போது அரசியலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒருதரப்பு, மாகாணசபைக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கும் எதிராக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. இன்னொரு தரப்பு, மாகாணசபை முறை மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. மேலும் ஒருதரப்பு, இரண்டுக்கும் நடுவே மதில் மேல் பூனையாக – எதையும் சாராதது போன்று காட்டிக் கொண்டிருக்கிறது.
 
அரசாங்கத்துக்குள்ளே கூட இந்த விவகாரத்தில் பெரும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன. உண்மையில், அரசாங்கத்தினது பேச்சிலும் கூடத் தடுமாற்றங்கள் இருப்பதை அவதானிக்கலாம். மாகாணசபை ஒரு வெள்ளை யானை என்று சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் பேட்டி ஒன்றில், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க குறிப்பிட்டிருந்தார். எதற்கும் பயனற்றது, பொதுமக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்வது என்பதே அவரது கருத்து. அவர் தனிப்பட்ட ரீதியாக அதனைக் குறிப்பிடவில்லை. அதிகாரபூர்வமாக - ஜனாதிபதியின் செயலர் என்ற வகையில் தான் அவ்வாறு கூறியிருந்தார்.
 
சில நாட்களின் பின்னர், அலரி மாளிகையில் ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, மாகாணசபைகளை வெள்ளையானை என்று முத்திரை குத்தும் கருத்தை நிராகரித்தார். மாகாணசபைகள் முழுமையாகத் தோல்வியடைந்து விடவில்லை என்றும், அதிலும் நன்மைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
மாகாணசபைகள் தொடர்பான அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு இதுவல்ல என்பதே உண்மை. மாகாணசபைகள், அவற்றுக்கான அதிகாரங்கள், 13ஆவது திருத்தச்சட்டம் என்பனவற்றை அரசாங்கத்தரப்பில் அதிகாரமுள்ள தலைவர்கள் ஒருபோதும் வரவேற்றுக் கருத்து வெளியிட்டதில்லை. அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விதிவிலக்கல்ல.
 
இந்தநிலையில், மாகாணசபைகளினாலும் நன்மைகள் உள்ளன என்று கூறியிருப்பதும், அதுவும், மிக முக்கியமான தருணத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதும் முக்கியமானது. அதாவது 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிக்க அல்லது மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதியே அதற்குச் சார்பாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
 
உண்மையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தால் தனது தற்துணிவின் பேரில், மாகாணசபைகளை முழு அதிகாரங்களுடன் செயற்பட வைத்திருக்க முடியும். அதற்கான ஆணையும் அதிகாரங்களும் அவரிடம் உள்ளன. 
 
ஆனால், அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மாகாணசபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கவில்லை. மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்தி அதனை ஒரு வெறும், பயனற்ற பொருளாக மாற்றுவதே அவரது திட்டம்.
 
பல்வேறு சந்தர்ப்பங்களில், அவர் மாகாணசபை முறைமைக்குப் பதிலாக, கிராமசபைகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும் என்றும், அதுவே உண்மையான அதிகாரப்பகிர்வு என்றும் கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
 
அதாவது மாகாணசபைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது இந்த அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாக இல்லாத போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்குச் சார்பான சில கருத்துகளை முன்வைத்துள்ளது ஆச்சரியமே.
 
13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டே இதனை நோக்க வேண்டும். அரசியல் சட்ட திருத்த விவகாரத்தில் எந்தவொரு நாட்டின் அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்று அரசாங்கம் வெளிப்படையாகக் கூறிக் கொண்டாலும், உள்ளூர இந்தியா குறித்த அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவே செய்கிறது.
 
ஏற்கனவே இந்தியாவுடன் பல்வேறு விடயங்களில் முரண்பாடுகள் உருவாகியுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் ஏற்படக் கூடிய நெருக்கடி, நிலைமைகளை மோசமாக்கி விடும் என்பது அரசாங்கத் தரப்புக்குத் தெரியாமல் போயிருக்காது.
 
அதுவும், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லிக்கு அழைத்து இந்தியா பேசிய பின்னர், நிலைமையின் தீவிரத் தன்மையை அரசாங்கம் புரிந்து கொள்ளாமல் இருக்காது.
 
இது தமிழர்களின் பிரச்சினை என்பதற்கு அப்பால், இந்தியாவினது கௌரவப் பிரச்சினையாகவும் கூட மாறி வருவதால், இலங்கை அரசாங்கம் சற்று நிதானமாகவே காய்களை நகர்த்தியாக வேண்டியுள்ளது.
 
இதனால், 13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் விடயத்தில், அரசாங்கம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காட்டிய தீவிரத்தன்மையை இப்போது காட்டவில்லை என்பதை, அன்றாட நடப்புகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
 
மாகாணசபைகளுக்கும், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கும் ஆதரவான அமைச்சர்கள் பலர் அரசாங்கத்துக்குள்ளேயும் இருக்கின்றனர். 
 
அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தாவும் ஆறுமுகன் தொண்டமானும் மதில் மேல் பூனைகளாக இருந்தாலும், ரவூப் ஹக்கீம், டியூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, ராஜா கொல்லுரே, சந்திரசிறி கஜதீர, ராஜித சேனாரத்ன, றெஜினோல்ட் குரே போன்றவர்கள் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதுவும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்த இறுக்கம் சற்றுத் தளர்ந்துள்ளதற்கு ஒரு காரணம்.
 
ஆளும்கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள், 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்துவதை விரும்பவில்லை என்றும் அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பே கூறுகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் இதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்வது சிக்கலானது.
 
ஆனால், அதற்காக அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு விடும் என்று கருத முடியாது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாகாணசபைகளை வெள்ளை யானை இல்லை என்று கூறினாலும், அவரது நிலை யானையின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல, யானையே தேவையில்லை என்பது தான். அவரது இலக்கு மாகாணசபைகள் அல்ல, கிராமசபைகள் தான். அந்த இலக்கை அடையும் வரை அரசாங்கம் ஓயப் போவதில்லை.
 
தற்போதைக்கு அரசாங்கம் தனது முயற்சியில் ஒரு சிறு பின்னடைவை சந்தித்துள்ளது அவ்வளவு தான்.
 
அதாவது வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக காணி, பொலிஸ் அதிகாரங்களை பிடுங்கிக் கொள்வது என்ற நிலைப்பாட்டில் இருந்து சற்று விலகி நிற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது அரசாங்கம்.
 
இந்தியாவின் தரப்பில் இருந்து வரும் எதிர்ப்பு மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய சந்தேகம் என்பன, இந்த தயக்கத்துக்கான காரணங்களாக குறிப்பிடலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் அரசாங்கம் அதை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டத்தையும் வைத்துள்ளது.
 
ஆனாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் இப்போது தயாராக இல்லை. ஏனென்றால், வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு.
 
இப்போது அரசாங்கத்தின் கவனம், கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் மீது தான் குவிந்துள்ளது. அதற்குப் பலத்த சவால்கள் உள்ளதால், எப்படியேனும் அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தால் தான் அரசாங்கத்துக்கு நிம்மதி. இதில் சறுக்கல் ஏற்பட்டால், சர்வதேச அளவில் இலங்கையின் பெயர் கெட்டுப்போய் விடும். எனவே, கொமன்வெல்த் மாநாட்டை எந்தப் பிரச்சினையுமின்றி நடத்தி முடிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது.
 
13ஆவது திருத்தச்சட்டத்தில் கைவைத்தால், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்ற ஒரு தகவலும் பரவியது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், அது அரசாங்கத்தை பெரும் பிரச்சினைக்குள் தள்ளிவிடும். எனவே இந்தியாவின் விரோதத்தை இப்போதைக்குச் சம்பாதித்துக் கொள்வதை தவிர்ப்பதற்காக, 13ஆவது திருத்த விவகாரத்தை மெல்ல மெல்ல நகர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.
 
கொமன்வெல்த் மாநாட்டின் பின்னர், இந்த அதிகாரக்குறைப்பு முயற்சிகள் தீவிரமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனாலும், அதனைச் சாதிப்பதற்கு, அரசாங்கத்தின் வசம் கருத்துக்கணிப்பு என்ற ஆயுதம் உள்ளது. ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரம் கருத்துக்கணிப்பை நடத்தும் தற்துணிவை வழங்கியுள்ளது. அதை வைத்தே அவர் தான் நினைத்ததை இலகுவாக அடைந்து விடுவார்.
 
அலரி மாளிகை ஊடகச் சந்திப்பில், மாகாணசபைகள் தொடர்பான மக்களின் கருத்தை அறிவது தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து, இதனை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும். கருத்துக்கணிப்பை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்ற வித்தை அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.
 

எனவே, தயக்கமின்றி அந்த முயற்சியில் அரசாங்கம் இறங்குவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

-கே.சஞ்சயன்

காங்கிரஸின் கேள்வி; கருணாநிதியின் கவலை!

Written By Unknown on Sunday, June 23, 2013 | 10:35 AM

வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் 5 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி யாரை ஆதரிக்கப் போகிறது என்பது தெளிவாகாத நிலையில் தி.மு.க. தலைமை மிகவும் கவலையில் ஆழ்ந்திருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சியின் ஆதரவை தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு பெறக் கோரி தி.மு.க.வின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர். பாலு தில்லியிலுள்ள முக்கியத் தலைவர்களை சந்தித்த வண்ணம் இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் தலைமை அவருக்கு சாதகமான பதிலை தெரிவிக்கத் தயங்குகிறது.
தமிழகத்திலிருந்து நடக்கவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் 6 இடங்களில் 5 இடங்களை அ.தி.மு.க. கூட்டணி தனது சொந்த பலத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு தே.மு.தி.க.வும் தி.மு.க.வும் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கின்றன.
29 உறுப்பினர்கள் கொண்ட அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான தே.மு.தி.க. உறுப்பினர்களில் 7 பேர் அதிருப்தியாளர்களாகிவிட்டிருப்பதால் அந்தக் கட்சிக்கு 22 உறுப்பினர்களின் வாக்குகள் மட்டுமே உறுதியாக கிடைக்கும் நிலை காணப்படுகிறது. அதேபோல தி.மு.க.வை பொருத்தவரையில் கட்சியின் 23 உறுப்பினர்கள் அல்லாமல் தலா 2 உறுப்பினர்களைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சியும் புதிய தமிழகம் கட்சியும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதன்மூலம் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 27 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாகி இருக்கிறது.
தி.மு.க. பலமாக எதிர்பார்த்த 3 உறுப்பினர்களைக் கொண்ட பா.ம.க. வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று முடிவெடுத்துவிட்ட நிலையில் தனது வேட்பாளர் கனிமொழியின் வெற்றிக்கு தி.மு.க. மலைபோல நம்பியிருப்பது 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவைத்தான். எதிர்பார்ப்புக்கு மாறாக காங்கிரஸ், தே.மு.தி.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்குமேயானால் தி.மு.க., தே.மு.தி.க. இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கும் தலா 27 வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையக்கூடும். அப்படிப்பட்ட நிலையில் 2வது சுற்று வாக்குகள் அல்லது பா.ம.க. வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் அ.தி.மு.க.வின் உபரி வாக்குகள் அல்லது தே.மு.தி.க. அதிருப்தியாளர்களின் வாக்குகள் போன்றவைதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலை ஏற்படும்.
தே.மு.தி.க., காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் மாநிலங்களவைத் தேர்தலில் தனது வேட்பாளர் இளங்கோவனை களமிறக்கியிருக்கிறது என்கிற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டு அந்த கட்சியின் ஆதரவை உறுதி செய்துகொண்ட நிலையில்தான் தே.மு.தி.க. போட்டியிடவே முடிவு செய்தது என்கிற தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தி.மு.க.விற்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளிக்க முடியாத தர்மசங்கடத்திற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலை டி.ஆர். பாலு சந்தித்தபோது, ""நீங்கள் உங்கள் வேட்பாளரை அறிவித்த பிறகுதான் இப்போது காலதாமதமாக வந்து ஆதரவு கேட்கிறீர்கள். ஆனால் தே.மு.தி.க.வோ எங்கள் ஆதரவை கோரிய பிறகுதான் தனது வேட்பாளரையே நிறுத்தியிருக்கிறது'' என்று கட்சியின் தயக்கத்தை வெளிப்படுத்தினாராம்.
தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதில் ராகுல் காந்திக்கு உடன்பாடில்லை என்று தலைநகர காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் எட்டரை வருடம் நம்முடன் கூட்டணியிலிருந்து ஆட்சியின் பயன்களை அனுபவித்துவிட்டு முக்கியமான காலகட்டத்தில் காலை வாரிவிட்ட தி.மு.க.வுக்கு நாம் ஏன் ஆதரவு கொடுக்க வேண்டும்? அதற்குப் பதிலாக தே.மு.தி.கவுடன் இணைந்து செயல்படுவதுதான் காங்கிரஸின் சுயமரியாதைக்கு ஏற்புடையதாக இருக்கும். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், தே.மு.தி.க. என்கிற புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு இது முதல்கட்ட முயற்சியாக அமையக்கூடும் என்று ராகுல் காந்தி தரப்பு கருதுவதாக தெரிகிறது.
காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டிலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்களை யாரை ஆதரிப்பது என்பது பற்றி கலந்து ஆலோசித்ததாகவும், ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட பெருவாரியான தலைவர்கள் தி.மு.க.வுடன் நமக்கு ஒட்டோ உறவோ தேவையில்லை என்றும் தே.மு.தி.கவை ஆதரிப்பதுதான் தேர்ந்த அரசியல் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்ததாக கூறுகிறார்கள். கே.வி. தங்கபாலுவும் ஜெயந்தி நடராஜனும் மட்டும்தான் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்களாம். இதன்மூலம், வருங்காலத்தில் மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் தாங்கள் நிறுத்தப்பட்டால் தி.மு.க. ஆதரவு அளிக்கக் கூடும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
தே.மு.தி.க. வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்கும் பட்சத்தில் பா.ம.க. தேர்தலை புறக்கணிக்கும் முடிவை கைவிட்டு காங்கிரûஸப் போலவே தே.மு.தி.க.வை ஆதரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கும் பா.ம.க. காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி உருவாகுமேயானால் அதில் தன்னை இணைத்துக் கொள்ளக்கூடும் என்பதால் இதற்கான வாய்ப்பை மறுதலிக்க முடியாது.
காங்கிரஸýம் பா.ம.கவும் தே.மு.தி.கவை ஆதரிக்குமேயானால் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வெற்றி கேள்விகுறியாகிவிடும். ஒருவேளை இப்படி நடக்காமல் போனால், அ.தி.மு.க.வின் உபரி வாக்குகளும் தே.மு.தி.க. அதிருப்தி உறுப்பினர்களின் வாக்குகளும்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பது தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கான போட்டியின் இன்றைய நிலைமை!
-தினமணி

யாழ் நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார்.
பாறைகள் சிதைவடைந்து இந்த சுவடு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும் இராமாயணப் போர் நடைபெற்றபோது அனுமான் மலையைத் தூக்கிக்கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மகனை துன்புறுத்திய தாயின் கள்ள கணவனுக்கு சிறை

Written By Unknown on Saturday, June 22, 2013 | 9:18 AM

10 வயதான பெறா மகனை தீயினால் சுட்டு துன்புறுத்திய தாயின் கள்ள கணவனுக்கு கேகாலை மேல் நீதிமன்றம்; கடுமையான வேலைகளுடன் கூடிய 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தரவே அவருக்கு இவ்வாறு தண்டனை விதித்து நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.

கடுமையான வேலைகளுடன் கூடிய 10 வருட சிறைத்தண்டனையுடன் 5000 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை செலுத்துவதற்கு தவறினால் மேலும் இரண்டுவருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டிவரும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

கித்துல்கல, இன்ஓயா தோட்டத்தைச்சேர்ந்த ரெங்கையா ஜெகனுக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தன்னுடைய தந்தை இறந்ததன் பின்னர் தன்னுடைய வீட்டுக்கு வரும் சித்தப்பா ஒருநாள் தன்னுடைய உடலில் மிளகாய் தூளை பூசி சுத்தியலால் தாக்கியதாகவும் பின்னர் தீயினால் சுட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுவனை நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவையும் தேசியவாதிகளையும் சமாளிக்கும் அரசாங்கத்தின் சட்ட திருத்தம்

Written By Unknown on Thursday, June 13, 2013 | 4:06 PM

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளின் சில அதிகாரங்களை ரத்துச் செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் சில சிங்கள தேசியவாத கட்சிகள் மிக ஆவலோடு விரும்பிய மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பறித்தல் அரசாங்கத்தின் உத்தேச திட்டத்தில் இல்லை.  

அரசாங்கம் முன்வைத்திருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது.

சில சிங்கள தேசியவாத கட்சிகள் நீண்ட காலமாக விடுத்து வந்த கோரிக்கையின் பிரகாரம் அரசாங்கம் மாகாண சபைகளுக்குறிய காணி மற்றும் பொலிஸ் அதகாரங்களை ரத்துச் செய்யாமல் மிக அண்மையில் ஜாதிக்க ஹெல உறுமய விடுத்த கோரிக்கையொன்றில் இருந்த சில விடயங்களை மட்டும் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது ஏன்? மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அனுபவிப்பதை அரசாங்கத்தின் தலைவர்கள் விரும்புகின்றார்களா?

அவர்கள் அதனை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில் கை வைக்காமல் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அண்மைக்கால சில சம்பவங்களை அலசிப் பார்த்தால் அது தெளிவாகிவிடும்.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்தே அதிகார பறிப்பு பற்றிய கூச்சல் எழத் தொடங்கியது. ஏனைய மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வைத்திருப்பதைப் பற்றி சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு எவ்வித பயமும் இருக்கவில்லை.

வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக 2012ஆம் ஆண்டு இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலாக கருத்து வெளியிட்டு இருந்தார். 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இத்தேர்தலை நடத்துவதாகவே அப்போது ஜனாதிபதி கூறியிருந்தார். 

உண்மையிலேயே 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அத்தேர்தலை நடத்துவது என்று பாரதூரமாக நினைத்தே ஜனாதிபதி அப்போது அவ்வாறு கூறினாரோ என்னவோ தெரியாது. ஆனால் இந்தியா இந்த கூற்றை பற்றிப் பிடித்துக் கொண்டது. அதன் பிரகாரமே கடந்த மார்ச் மாதம் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தின் போது இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதென்ற விடயமும் உள்ளடக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளுக்கு தமது இருப்பை மக்களுக்கு அறிவிக்க பொருளாதார பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தில் உள்ள சிறு கட்சிகளுக்கு, குறிப்பாக சிங்கள தேசியவாத கட்சிகளுக்கு தமது இருப்பை அறிவிக்க பொருளாதார பிரச்சினைகளை தொட முடியாது. அது அரசாங்கத்தின் தலைவர்களின் கோபத்திற்கு உள்ளாகும் காரணமாகும். எனவே அவர்கள் அடிக்கடி இனப்பிரச்சினையை பிடித்துக் கொள்கிறார்கள். 

செப்டெம்பர் மாதம் நெருங்கவே அவர்கள் வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றி கூச்சலிட ஆரம்பித்தனர். முதலில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவே சர்ச்சையை ஆரம்பித்தார். அவரே பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என முதலில் கோஷம் எழுப்பினார். 

பின்னர் ஜாதிக்க ஹெல உருமயவும் அதில் தொற்றிக் கொண்டது. சிங்கள மக்களின் கண்ணோட்டத்தில் தாம் தேசிய சுதந்திர முன்னணியை விட சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக மாகாணசபை முறையையே இல்லாமல்; செய்யும் வகையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என அக்கட்சி கோஷமிட ஆரம்பித்தது. இதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவும் கிடைத்தது.

அவர்களது குரல் வலுப்பெற்று வரும் நிலையில் கடந்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குரஷித் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸூடன் தொலைபேசி மூலம் பேசி மாகாண அதிகாரங்களை பறிக்க எடுக்கும் முயற்சிகளைப் பற்றி தமது அதிருப்தியை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அரசாங்கம் பெரும் அசௌகரித்திற்கு உள்ளாகியிருக்கும் என்று ஊகிக்க முடியும் ஏனெனில் தாமே சிங்கள மக்களின் பாதுகாவலன் என்று காட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தினால் தேசியவாத கட்சிகளின் கோரிக்கைகளை முற்றாக நிராகரிக்கவும் முடியாது. அதேவேளை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேணையின் போது இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தாலும் இந்தியாவை பகைத்துக் கொள்ளவும் முடியாது. 

இதனிடையே ஹெல உறுமய, அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. இதனால் அரசாங்கம் மேலும் அசௌகரியத்திற்குள்ளாகும் என பலர் நினைத்த போதிலும் அந்த திருத்தத்திற்குள் அரசாங்கத்திற்கு பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பும் இருந்தது. 

முன்னர் கூறியதைப் போல் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக ரத்துச் செய்வதற்காக ஹெல உறுமய இந்த திருத்த சட்;ட மூலத்தை கொண்டு வரவில்லை. மாறாக மாகாண சபைகளுக்குறிய சில அதிகாரங்களை ரத்துச் செய்வதனையே அது நோக்கமாக கொண்டது. 

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்பதற்கு மேலதிகமாக மாகாணங்கள் இணையும் அதிகாரத்தையும் ரத்துச் செய்து சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்காரம் பெற வேண்டும் என்ற நிலையும் ரத்துச் செய்ய வேண்டும் என்றே ஹெல உருமய கேட்கிறது. 

தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே ரத்துச் செய்ய வேண்டும் என்று கேட்பது யதார்த்தம் அல்ல என ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில கடந்த செவ்வாய்க்கிழமை மேல் மாகாண சபைக் கூட்டத்தின் போது கூறியிருந்தார். அதாவது இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் நெருக்குவாரம் பலித்துள்ளது. அது தான் அவர் கூறும் சர்வதேச நிலைமை என்பது புலனாகிறது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் கோபத்திற்குள்ளாகாமல் தேசியவாதிகளோடு சேர்ந்து செயற்பட ஹெல உறுமயவின் இந்த திருத்த சட்ட மூலம் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தை கொடுத்தது. அரசாங்கம் என்ன செய்ததென்றால் ஹெல உறுமயவின் சட்டமூலத்தில் இருந்த நான்கு காரணங்களில் இரண்டை மட்டும் எடுத்து அரசியலமைப்பை திருத்தப் போகிறது. 

அதன் பிரகாரம் பொலிஸ், காணி அதகாரங்களில் கை வைப்பதில்லை. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைந்து தனி மாகாணமாவதற்கு இருந்த வாய்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது. அதேவேளை சில விடயங்களுக்கு சகல மாகாண சபைகளிடமும் அங்கீகாரம் பெற்றே அரசாங்கம் அவ்விடயங்கள் தொடர்பாக சட்டம் இயற்றலாம் என்ற நிலையும் இல்லாமல் செய்யப்படுகிறது. இனி 9 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்கள் விரும்பினால் போதும்.

இதனை அனேகமாக இந்தியா எதிர்க்காது. ஏனெனில் தமிழீழத்தை அமைப்பதற்காகவே தமிழ் கட்சிகள் ஆரம்ப காலத்தில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை கோரின. இந்தியா தமிழீழத்தை விரும்பவில்லை. அக்காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களை சமாளிப்பதற்காகவே இந்தியா அப்போது மாகாண இணைப்பை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டது.

அதிகர பரவலாக்கல் என்ற அர்த்தத்தில் மாகாண இணைப்பு அவசியமானதொன்றல்ல. ஏனெனில் அதிகார பரவலாக்கலின் ஒரு நோக்கம் நிர்வாகத்தை மக்களுக்கு சமீபமாக்குவதேயாகும். ஆனால் மாகாண இணைப்பானது இப்போது தமிழர்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக இருப்பதால் அவர்கள் அதனை தொடர்ந்து கோரி வருகிறார்கள். இந்தியாவுக்கு அதைப் பற்றி இப்போது அவ்வளவு அக்கறை இருக்கும் என்று கூற முடியாது. அது இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியும்.

அரசியலமைப்பில் மாகாண சபை அதிகார பட்டியல், (மத்திய அரசாங்கத்திறகு) ஒதுக்கப்பட்ட அதிகார பட்டியல் மற்றும் ஒருங்கியல் (பொது) அதிகார பட்டியல் என மூன்று பட்டியல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒருங்கியல் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் ஏதாவது தீரமானம் எடுப்பதாக இருந்தால் சகல மாகாண சபைகளினதும் ஒப்புதல் அதற்காக பெற வேண்டும். அரசாங்கத்தின் புதிய திருத்தத்தின் படி இனி பெரும்பாலான மாகாண சபைகளின் ஒப்புதல் பெற்றால் போதுமானதாகும்.

அனேகமாக மத்திய அரசாங்கத்தில் பதவியில் இருக்கும் கட்சியே தெற்கில் பெரும்பாலான மாகாண சபைகளிலும் பதவியில் இருக்கும். எனவே அரசாங்கத்தின் புதிய திருத்தத்தின் படி இனி எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஒருங்கியல் பட்டியலில் உள்ள எந்தவொரு விடயம் தொடர்பாகவும் இலகுவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற முடியும். 

சுருக்கமாக கூறின் இதன் மூலம் ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை அரசாங்கம் கைப்பற்றிக் கொண்டுள்ளது. பெரும்பாலான மாகாண சபைகள் விரும்பினால் அரசாங்கத்தின் மோசமான திட்டங்களை தோற்கடிக்க முடியும் என சித்தாந்த ரீதியில் வாதிட முடியுமாக இருந்த போதிலும் அது நடைமுறையாகப் போவதில்லை.

ஒருங்கியல் பட்டியலில் உள்ள ஒரு விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் ஏதாவது தீரமானம் எடுப்பதகற்காக சகல மாகாண சபைகளினதும் ஒப்புதல் பெற வேண்டும் என்றால் ஒரு மாகாண சபை விரும்பாவிட்டாலும் அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாது. எனவே அது ஏனைய மாகாண சபைகளுக்கு இழைக்கும் அநீதி என ஹெல உறுமய வாதாடுகிறது. அதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதேவேளை நடைமுறையில் இனி ஒருங்கியல் பட்டியல் விடயத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரமே இல்லாமல் போய்விடுகிறது.

இதனையும் இந்தியா எதிர்க்கும் என்று எதி;ப்பார்க்க முடியாது. ஏனெனில் சித்தந்த ரீதியில் இதில் தவறு இல்லை. சிலவேளை இதன் மூலம் தமிழ் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்து, ஆளம் கட்சி; மாகாண சபையை கைப்பற்றிக் கொண்டு, போரின் பின்னர் தமிழ் மக்கள் தம்மோடு இருக்கிறார்கள் என்று உலகுக்கு காட்டிக் கொள்வதும் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கலாம். 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger