R News: வவுனியா
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label வவுனியா. Show all posts
Showing posts with label வவுனியா. Show all posts

தாய் பாசத்தைவிட வலிமையானது கள்ளக்காதல்..வவுனியாவில் பெற்ற குழந்தையை கிடங்கு வெட்டிப் புதைத்த தாய்

Written By Unknown on Saturday, July 13, 2013 | 6:15 PM

வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்குவெட்டிப் புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ,ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்; அம்மிவைத்தானில் வசித்து வந்த பெண்ணொருவர் கணவன் வெளிநாட்டில்வாழ்ந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை குழந்தையொன்றைப் பிரசவித்து அதனை உடனேயே கிடங்கு வெட்டிப்புதைத்துள்ளார். இது குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவித்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாய்க்கு 7வயது மகன்உள்ள நிலையில் தற்போது இத்தாய் தலை மறைவாகியுள்ளார். இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுள்ளனர் எனத் தெரிவித்தார்.

வட மாகாண தேர்தலுக்கு ஜனாதிபதி அனுமதி

Written By Unknown on Friday, July 5, 2013 | 1:55 PM

வட மாகாண சபை தேர்லை நடத்துவதற்கான அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ளார்.
அத்துடன்  வடமேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேனப்பிலவு சம்பவம் : இராணுவச் சிப்பாய் கைது

Written By Unknown on Thursday, May 23, 2013 | 10:39 AM

வவுனியா நெடுங்கேணி, சேனைப்பிலவு பாடசாலை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய இந்த ஏழு வயதுச் சிறுமி கடந்த வாரம் கடத்திச் செல்லப்பட்டு, காட்டுப்பாங்கான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று விசாரணகளின் மூலம் தெரியவந்திருக்கின்றது. தலை, காது, கண் ஆகியவற்றில் காயமடைந்த இவர் தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று நெடுங்கேணி, வவுனியா ஆகிய நகரங்களில் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. 

பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி, இந்த ஆர்பபாட்டங்களின்போது, ஜனாதிபதிக்கு மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியிலேயே நெடுங்கேணி பகுதியில் பணியாற்றுகின்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இவரை விசாரணைக்கு உட்படுத்திய புலனாய்வு பொலிசார் வவுனியா நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தி மூன்று தினங்கள் இவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருப்பதாக பொலிசார் கூறினர். இந்த சந்தேக நபர் இதற்கு முன்னர் இடம்பெற்ற இதேபோன்றதொரு குற்றச்செயலில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதற்காகத் தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Written By Unknown on Sunday, January 13, 2013 | 3:04 PM

வவுனியா, சுந்தரபுரம் பொடுங்கன்பிலவு குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. 

சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை கணேசன் (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று சனிக்கிழமை வீடு வந்து சேராத இவரை உறவினர்கள் தேடிச்சென்றபோது, இவர் குளத்தில் சடலமாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

சுந்தரபுரம் பொடுங்கன்பிலவு குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதை வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சன்ன அபயரத்ன உறுதிப்படுத்தினார். 

சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன்,  பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். 

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

கூடங்குளம்: வட-இலங்கையிலும் எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள்

Written By Unknown on Saturday, October 27, 2012 | 3:46 PM

கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பை இந்திய அரசு பொருட்படுத்தாதபடியால் நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.தமிழகத்தில் நீண்ட போராட்டத்துக்கு காரணமாகியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கருத்துக்களுடன் இலங்கையின் வடக்கே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கையில் உள்ள மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக இந்த துண்டுப் பிரசுரங்கள் அமைந்துள்ளன.
மக்கள் போராட்டக் குழு என்ற அமைப்பு வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இதனை ஒழுங்கு செய்திருந்தது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களும் வவுனியா, அனுராதபுரம் உள்ளிட்ட மற்ற வடபகுதி மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக இந்த எதிர்ப்பு துண்டுபிரசுரங்களை வெளியிட்ட நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தர்மலிங்கம் கிருபாகரன் கூறினார்.
அண்மையில் சுனாமி தாக்கத்திற்கு உள்ளான ஜப்பானில் அணுமின் உலைகள் வெடித்ததால் ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்புகள் தொலைதூர பிரதேசங்களையும் பாதித்திருந்தது, எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் எமது நாட்டில் வடபகுதி மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
'கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, அந்த அணுமின் நிலைய திட்டத்தை இந்தியா கைவிடும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இது விடயத்தில் அங்குள்ள அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்த அளவில் செயற்படவில்லை. எனவே தான், கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கள், அபயாம் குறித்து வடபகுதி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம்' என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அரசின் கண்ணுக்கு புலப்படாத இரு அகதி முகாம்கள்

Written By Unknown on Saturday, October 13, 2012 | 5:11 PM

கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. 

ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப் பொமக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் நலன்புரி முகாம்கள் இனி இல்லை எனவும் அரசாங்கம் கூறித்திரிவதில் எந்தவொரு உண்மையும் இல்லை  என்றே எண்ணத் தோன்றுகிறது. 

1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் அவர்கள் வவுனியாவின் பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 

அக்காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஆரம்ப காலத்தில் அம்மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வந்தது. அத்துடன், பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் இம்மக்களுக்கான உதவிகளைச் செய்தது. 

காலப்போக்கில் குறித்த இரு முகாம்களையும் சேர்ந்த பொதுமக்கள் சிலர் படிப்படியாக அவரவர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கும், மேலும் சிலர் இந்தியாவுக்கும் சென்று குடியேறினர். 
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து மேற்படி முகாம்களிலுள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறி சொந்த இடங்களுக்குச் செல்லுமாறும், நலன்புரி முகாம்களை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால் முகாம்களிலுள்ள மக்களுக்கு எந்தவொரு உதவியும் வழங்கப்பட மாட்டாது எனவும் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்ட செயலகத்துக்குச் சென்றுள்ள முகாம் மக்கள், தங்களது சொந்த காணிகளும் வீடுகளும் யுத்தத்தால் முழுமையாக அழிவடைந்துள்ளன என்றும் அதனால் தங்களுக்கு போக்கிடம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில், மாவட்ட செயலகத்தினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் அம்மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுப்பதாகவும் அதனால் அப்பிரதேசங்களுக்குச் செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மேற்படி இரு முகாம்களைச் சேர்ந்த ஒருதொகுதி குடும்பங்கள் அரசாங்கம் வழங்கிய காணிகளுக்குச் சென்று மீள்குடியேறியுள்ளன. இருப்பினும் மற்றுமொரு தொகுதியினர், தங்களால் அப்பிரதேசங்களுக்குச் செல்ல முடியாது என்று கூறி முகாம்களிலேயே தங்கியுள்ளனர். 

பல வருடங்களாக வவுனியா நலன்புரி முகாம்களிலேயே தங்கியுள்ளதால், அங்கிருந்தவாறு கூலி வேலைகளைச் செய்து தமது பிள்ளைகளைப் படிக்கவைக்க முடிகின்றது என்றும், அரசாங்கம் பெற்றுக்கொடுத்த காணிகளுக்குச் சென்றால் கூலி வேலைகளுக்குக்கூட செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், இதனால் தங்களது பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் என்றும் முகாம்களிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் அரசாங்கம் தங்களுக்கு வவுனியா பிரதேசத்திலேயே காணிகளைப் பெற்றுக்கொடுத்து அங்கு தங்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்றும் அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

இது தொடர்பில் தங்களது முகாம்களுக்கு வந்த அரசாங்க அதிகாரிகளிடம் பலமுறை வேண்டுகோள்களை முன்வைத்த நிலையில் அவர்களும் தங்களுக்கு வவுனியாவிலேயே காணிகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர் என அம்முகாமிலுள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இருந்த போதிலும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அம்மக்கள் குறிப்பிட்டனர். 

வவுனியாவின் பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு நலன்புரி முகாம்களில் தற்போது சுமார் 502 குடும்பங்கள் எஞ்சியுள்ளனர். இதில் 217 குடும்பங்கள் பூந்தோட்டம் நலன்புரி முகாமிலும் 285 குடும்பங்கள் சிதம்பரபுரம் முகாமிலும் தங்கியுள்ள நிலையில், அரசாங்கத்தினாலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களினாலோ எந்தவித உதவிகளோ அல்லது சலுகைகளோ தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் தாங்கள் அரச அதிகாரிகளிடம் வினவியபோது, நலன்புரி முகாம்கள் மூடப்பட்டுள்ளதால் எந்தவொரு உதவிகளும் இனி வழங்கப்படுவதில்லை என அவ்வதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் அம்மக்கள் குறிப்பிடுகின்றனர். 

அன்றாடம் கூலி வேலைகளுக்குச் சென்றே தங்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் தங்கள் குறித்து எவரும் கரிசனை காட்டுவதில்லை என்றும் அம்மக்கள் கவலை வெளியிடுகின்றனர். 

இந்நிலையில், இவ்விரு முகாம்களிலுள்ள மக்கள் தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திரவிடம் கேட்டபோது, இந்த மக்கள் அரச அனுமதியின்றியே குறித்த பிரதேசத்தில் குடியிருக்கின்றனர் என்றும் அவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை தாம் முல்லைத்தீவில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் அவர்கள் அங்கு செல்ல மறுக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், இவர்கள் இடம்பெயர் மக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவரப்படாதவர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு அரசாங்கம் எந்தவித கொடுப்பனவுகளையோ சலுகைகளையோ வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இம்மக்கள் கோரும் இடத்தை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலணியே தீர்மானிக்கும் என்றும் வவுனியா மாவட்டச் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சர்வதேச ரீதியில் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும், இலங்கையில் இனி நலன்புரி முகாம்கள் இல்லை என்று மார்தட்டிக்கொண்டாலும் சுமார் 15 வருடங்களாக முகாம் வாழ்க்கையையே வாழ்ந்து வரும் ஒரு தொகுதி மக்களும் இருக்கின்றார்கள் என்பதை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும். 

அதேசமயம், நலன்புரி முகாம்கள் இலங்கையில் இனி இல்லை என்ற கருத்தை உண்மையாக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் அரசாங்கம் களமிறங்க வேண்டும். 15 வருட முகாம் வாழ்க்கை வாழும் இந்த பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் மக்களுக்கு மறுவாழ்வளிக்க அரசாங்கமும் உரிய தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அம்மக்களினதும் எதிர்ப்பார்ப்பாகும்.  
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger