R News: இலங்கை
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

இலங்கை தொடர்பிலான ஐ.நா அறிக்கை செப்ரெம்பரில் சமர்ப்பிக்கப்படும்.- ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர்.

Written By Unknown on Tuesday, June 16, 2015 | 3:40 PM

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையினை ஐ.நா பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை தொடர்பிலான ஐ.நா அறிக்கை செப்ரெம்பர் மாதக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படுமென ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட்ராட் அல் ஹூசேன் மீள உறுதிப்படுத்தியுள்ளார். 


பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை வரும் செப்ரெம்பர் கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்பினையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் வெளிப்படுத்தியுள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வின் தொடக்க உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் தனது உரையில் இலங்கையின் புதிய அரசாங்கம் அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீளப் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். 
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நம்பகமான பொறிமுறைகளை உருவாக்கும் போது வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

13 விவகாரம்; இந்தியா அதிருப்தி: நாராயணசாமி

Written By Unknown on Friday, July 5, 2013 | 1:52 PM

'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்ய இந்தியா அனுமதிக்காது. இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது' என்று இந்திய பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 'மாகாண சபைகளை நிறுவுவதற்காகவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்காகவும் இந்திய - இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையையும் திருத்தச் சட்டத்தையும் இலங்கை அரசு ஒருதலைபட்சமாக திருத்த முடியாது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 'அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதையே இந்தியா விரும்புகிறது. இது இலங்கை அரச தரப்பினரிடம் பல முறை கூறப்பட்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனா ஆகியோரிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமும் அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது சட்டத் திருத்தமும் நீர்த்துப் போக நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது' எனவும் அவர் கூறியுள்ளார். 'இலங்கை அரசு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்து அதன் மூலம் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கவுள்ளது என்பதே, அந்தச் சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கையாகவே இந்தியாவால் பார்க்கப்படுகிறது' என்றும் அமைச்சர் நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார். 'சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது கூட, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் அதிகாரப் பகிர்வை கொண்டுவரும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் நாராயணசாமி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். (பி.பி.சி)

'புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை': மகிந்த

Written By Unknown on Sunday, May 19, 2013 | 11:09 AM


இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 'படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை' என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொது மக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
'மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்' என்றார் மகிந்த ராஜபக்ஷ.
தூக்கு மேடை வரை செல்லவேண்டியிருந்தவர்களுக்கு அரசாங்கம் மன்னிப்பளித்து புனர்வாழ்வு கொடுத்ததாகவும் 4000 தமிழர்களை சிவில் படையில் இணைத்துள்ளதாகவும் முப்படைகளிலும் சேர்ப்பதற்கு ஆட்கள் வரிசையில் நிற்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
போர் வெற்றிவிழாவில் மகிந்த ஊர்வலம்
படையினர் உயிர்த் தியாகம் செய்து வென்றெடுத்த நாட்டில் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட பறிப்பதற்கு இடம்கொடுக்கப் போதுமில்லை. நாட்டைப் பிரிக்க இடமளிக்கப் போவதுமில்லை என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.
போர் வெற்றிவிழாவில் மகிந்த ஊர்வலம்'1977-இல் ஆட்சிக்கு வந்த முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி (ஜே.ஆர். ஜெயவர்தன) மக்களின் பாதுகாப்பை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் வந்த ஜனாதிபதி (ரணசிங்க பிரேமதாஸ) பொலிஸ் அதிகாரிகள் 700 பேரை புலிகளிடம் அடிபணியச் சொன்னார், அவர் புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்தார். அவரையே நடுவீதியில் வைத்து புலிகள் கொன்று போட்டனர்' என்று ராஜபக்ஷ போர் வெற்றி விழாவில் கூறினார்.
அதேபோல், 'புலிகளின் தலைவருக்கு குண்டு துளைக்காத அங்கியைக் கொடுத்து சமாதானப் பேச்சுக்கு வருமாறு கையில் பிடித்துச் சென்ற இந்தியப் பிரதமரை தமிழ் நாட்டில் வைத்து புலிகள் கொன்று போட்டனர். அதேபோல போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்து நாட்டின் ஒரு பாகத்தைக் காட்டிக் கொடுத்தவர்களால் கொழும்பில் குண்டு வெடிப்பதை தடுக்க முடியாமல் போனது' என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் வடக்கில் இயங்கமுடியாமல் அஞ்சி கொழும்பில் தஞ்சமடைந்திருந்த 12 அரசியல் கட்சிகள் வரை, இன்று அங்குபோய் அரசியலில் ஈடுபடுமளவுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் மகிந்த மேலும் கூறினார்.

இந்தியாவுடன் சமரசத்துக்கு இலங்கை கடும் பிரயத்தனம்; புதுடில்லியின் சமிக்ஞைக்காகக் காத்திருப்பு

Written By Unknown on Saturday, March 2, 2013 | 10:39 AM


வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரணை நடத்தக் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடன் சமரசம் செய்து கொள்வதற்கு இலங்கை அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது.
 
ஜெனிவாவில் ஏற்படவுள்ள அழுத்தங்களில் இருந்து இலங்கையைக் காப்பாற்றக் கூடிய நிலையில் இந்தியாவே இருப்பதால், அதனுடன் பேசி, ஓர் இணக்கப் போக்கை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதாகக் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
 
இலங்கையின் நிலைப்பாட்டைப் புதுடில்லிக்கு விளங்கப்படுத்தி, அதன் ஆதரவைத் திரட்டுவதற்காக விரைவில், இலங்கை அரசின் உயர்மட்டக் குழு அல்லது பிரதிநிதி இந்தியா செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
அண்மையில் புதுடில்லி சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால், புதுடில்லியை வளைத்துப் போடு முடியாததால், மீண்டும் அவர் அங்கு அனுப்பப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிகிறது.
 
ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அல்லது இவர்களை உள்ளடக்கிய குழுவொன்றே புதுடில்லிக்கு அனுப்பப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
 
இது தொடர்பாக, புதுடில்லியின் சாதகமான சமிக்ஞைக்காகக் கொழும்பு காத்திருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
அதேவேளை, இலங்கையின் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று இலங்கை நம்புவதாக, ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
 
போருக்குப் பின்னர் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவிடம் இலங்கை எடுத்துக் கூறும்.நாம் இந்தியாவிடம் முறையிடப் போவதில்லை.
 
ஆனால், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, உட்கட்டுமான மீளமைப்புகளில் நாம் எட்டியுள்ள சாதனைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம் என்று அவர் கூறியுள்ளம குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=568481863502216747#sthash.Hd8WHKPA.dpuf

ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சிங்

Written By Unknown on Sunday, February 24, 2013 | 11:56 AM


''அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்' என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையின் போதே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கான காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சுதர்சனம் நாச்சியப்பன் தெரிவித்தார்.

அத்துடன் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தாம் இலங்கை அரசாங்கத்தை கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட 37 அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா, இலங்கையை வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

இதேநேரம், சுதர்சனம் நாச்சியப்பன் பிபிசிக்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவில் வாழும் தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் ஆகியோரின் நோக்கமும் இலங்கையில் வாழும் தமிழர்களின் தேவையும் வேறுபட்டது என்ற எண்ணப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
'இந்தியாவில் உள்ள மக்கள் மற்றும் உலகில் ஆங்காங்கே குடியுரிமை பெற்று வாழும் தமிழர்கள் விடுக்கும் கோரிக்கை பற்றியும் அதாவது போர்க்குற்றச்சாட்டு குறித்து நாம் கவனத்தில் கொண்டிருக்கிறோம். எனினும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள், எதற்காகப் போராடினார்களோ அவர்களின் கோரிக்கை பற்றி அதிக அக்கறையுடன் நாம் செயற்படுகின்றோம். இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறோம், விவசாயத்திற்கு வேண்டிய விதைகள், பசளைகள், கிருமிநாசினிகள் ஆகியவற்றை உதவியாக வழங்குகின்றோம்' எனவும் அவர் கூறினார்.

இலங்கையின் நிர்வாகத்தில் மூக்கை நுளைக்க தயாராகின்றது ஐ.நாவின் விசேட குழு?

Written By Unknown on Sunday, February 10, 2013 | 11:07 AM

இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. 

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் அடிப்படையிலேயே மேற்படி குழுவை நியமிப்பதற்கான யோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.  இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு அப்பிரேரணையின் பிரதிகள் தனிப்பட்ட ரீதியில் விநியோகிக்கப்பட்டதை அடுத்தே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் தேடியறிந்து அவற்றை நடைமுறைப்படுத்த வற்புறுத்துதல், இந்நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், காணாமல் போவதை தடுத்தல் மற்றும் சுயாதீன நீதித்துறையை உறுதி செய்தல் போன்ற விடயங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்த வேண்டும் என்று மேற்படி பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த பிரதான யோசனைகளைத் தவிர, வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைத்தல், வடக்கு கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிரந்தரமானதொரு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தல், நபர்களைக் கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் கொள்கைகளை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அமைத்தல், கருத்து சுதந்திரத்தை உறுதி செய்தல் மற்றும் மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குதல் தொடர்பான பல முன்மொழிவுகளும் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள யோசனைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் திருத்தத்துக்கு உட்படுத்தும் வாய்ப்பு உள்ளதென சுட்டிக்காட்டியுள்ள இராஜதந்திர தகவல்கள், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் யோசனையொன்றும் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. 

அமெரிக்காவின் பிரேரணை சாதாரண விடயமல்ல: அமைச்சர் திஸ்ஸ விதாரண

Written By Unknown on Saturday, February 2, 2013 | 9:55 AM


ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பதை சாதாரண விடயமாகக் கருத முடியாது.
இதன் மூலம் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு யோசனை முன்வைக்கும் சாத்தியம் உண்டு என அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை புலி ஆதரவு புலம்பெயர் மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்வர். எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக அமுல்படுத்துவதாக சர்வதேசத்துக்கு வலியுறு;திக் கூறுவதே அழுத்தங்களைக் குறைப்பதற்கான ஒரே வழியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி பாராளுமன்றத் தெரிவுக்குழுவை கூட்டி அரசியல் தீர்வை விரைந்து காண்பதன் மூலமே இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடர் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்து சமுத்திரத்தில் தொடரப்போகும் ஆதிக்கப் போட்டி

Written By Unknown on Sunday, December 23, 2012 | 11:56 AM


இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நான்கு நாள் இலங்கைப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக கடந்த ஜூன் முதலாம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
இவர் இந்திய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்காக நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவையெல்லாம் இந்தியாவுடன் தரைவழி எல்லைகளைக் கொண்ட நாடுகள் என்ற வகையில், தரைவழி எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள இராணுவத்தின் தளபதி என்ற வகையில் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.
ஆனால், இலங்கையுடன் தரைவழி எல்லை எதையும் இந்தியா கொண்டிராத நிலையில், இந்திய இராணுவத் தளபதியின் இந்தப் பயணம் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக புதுடெல்லியால் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, 2010 செப்டெம்பரில், அப்போதைய இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதற்குப் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்தே, இந்திய இராணுவத் தளபதி ஒருவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் – கொழும்பு வந்தபோது இருந்த சூழலை விடவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் தான் இப்போதைய இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் இங்கு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசெம்பரில் இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய – புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து, இந்திய இராணுவத் தளபதி மேற்கொள்கின்ற ஒரு சம்பிரதாய ரீதியான பயணமாக மட்டும் இதைக்கொள்ள முடியாது.
ஏனென்றால், இந்திய இராணுவத் தளபதியின் வருகையின் நோக்கம், சம்பிரதாய விடயங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை புதுடெல்லியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
கடந்த வாரம், காலியில் நடந்த 28 நாடுகள் பங்கு கொண்ட கடற்பாதுகாப்புக் கருத்தரங்கில், பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்து சமுத்திரத்தில் சீனாவின் தலையீட்டை நியாயப்படுத்திக் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளில் சீனாவின் இராணுவ, பொருளாதார, அரசியல் தலையீடுகள் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளால் அச்சுறுத்தலுடன் பார்க்கப்படுவதாகவும் அவர் சாடியிருந்தார்.
இந்தியத் தரப்பினால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமைந்திருக்க முடியாத அந்த உரை நிகழ்த்தப்பட்ட சில நாட்களில், இந்திய இராணுவத் தளபதியின் வருகை நிகழ்ச்சி நிரல் பொருந்திப் போனது ஆச்சரியமானதே.
சீனா தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட கருத்துக்கும் இந்திய இராணுவத் தளபதியின் இந்தப் பயணத்துக்கும் எவரேனும் முடிச்சுப் போட முடியாது. இரண்டும் வேறுபட்ட நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டவை.
ஆனால் சீனா, இந்தியா என இரண்டு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு, உதவிகளையும் பெற்றுக்கொள்வதில் இலங்கை உறுதியாகவே உள்ளது. இப்போதைய நிலையில் அரசியல், இராஜதந்திர ரீதியாக புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் ஒருவித ஊடல் இருந்தாலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற விவகாரத்தில் அத்தகைய நிலை இல்லை என்றே கருதலாம்.
ஏனென்றால், சீனாவுடன் நெருக்கமாக உள்ள இலங்கையை, எப்போதும் தன் பிடியில் இருந்து நழுவாமல் பார்த்துக் கொள்வதற்கு, இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்பே உதவும் என்று இந்தியா வலுவாக நம்புகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, இலங்கைக்கு சீனாவே பிரதான ஆயுத விநியோக நாடாக இருந்து வந்தது. ஆனாலும், இந்தியாவினது பாதுகாப்பு ஒத்துழைப்பும் உதவிகளும் இலங்கைக்கு அவசியம் தேவைப்பட்டன.
தற்பாதுகாப்பு ஆயுதங்கள் என்ற வகையில், இந்தியாவும் புலிகளுக்கு எதிரான போரில் ஆயுதப் பங்களிப்புகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்படையின் அச்சுறுத்தல் எழுந்தபோது, எல்-70 ரகத்தைச் சேர்ந்த 24 விமான எதிர்ப்புப் பீரங்கிகள், இந்திரா ரகத்தைச் சேர்ந்த இருபரிமாண ரேடர்கள், 10 கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள், 11 கண்காணிப்பு ரேடர்கள் என்பனவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கியிருந்தது.
கடலில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆழ்கடல் ரோந்துப் படகுகளையும், கடற்புலிகளின் நடமாட்டங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் இலங்கையுடன் இந்தியா பகிர்ந்து கொண்டது. அது தவிர, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட படையினரின் கணிசமானோர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் தான்.
மாலைதீவு, மொறிசியஸ், மொங்கோலியா, பொட்ஸ்வானா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற பல நாடுகளின் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்து வருகின்ற போதும், அவர்கள் எல்லோரையும் விட இலங்கைப் படையினருக்கே இந்தியா அதிக பயிற்சிகளை வழங்குகிறது.
இந்தியாவின் வெவ்வேறு பயிற்சி நிலையங்களில் ஆண்டுக்கு 800 தொடக்கம் 900 வரையான இலங்கைப் படையினர் பயிற்சி பெறுகின்றனர்.
டேராடூன் இராணுவப் பயிற்சி மையம், மிசோராமில் கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் காட்டுப் போர்முறைப் பாடசாலை, மகாராஷ்டிராவில் உள்ள ஆட்டிலறிப் பயிற்சிப் பாடசாலை ஆகியவற்றில் இலங்கை இராணுவத்தினருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்போதும் அளிக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் 820 இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளித்த இந்தியா, இந்த ஆண்டில் 870 படையினருக்குப் பயிற்சி அளிக்கிறது. இந்தியாவில் மட்டுமன்றி, கண்டியில் கடந்த 2009 பெப்ரவரியில் இராணுவப் புலனாய்வுப் பாடசாலையை உருவாக்குவதற்கும் இந்தியா உதவியது. அங்கு இந்திய இராணுவத்தின் 10 குழுக்கள் பயிற்சிகளை அளித்து வருகின்றன. இந்த உதவி, அடுத்த ஆண்டு டிசெம்பர் வரை தொடரும்.
இதற்கிடையே, இந்திய – இலங்கை இராணுவங்களின் சிறப்புப் படையினரின் 21 நாள் போர்ப் பயிற்சிகள் இந்தியாவில் இப்போது இடம்பெற்று வருகின்றன. ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள நஹான் என்ற இடத்தில் இந்தப் பயிற்சிகள் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகின. வரும் 24ஆம் திகதி முடிவடையவுள்ளன. கிளர்ச்சி முறியடிப்பு அனுபவங்களை இதில் இருநாட்டுப் படையினரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இவ்வாறு எல்லா மட்டங்களிலும், இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உறுதியானதாக இருந்தாலும், அதில் இந்தியா திருப்தி கொள்ளவில்லை. காரணம், சீனா மற்றும் பாகிஸ்தானுடன், இலங்கை கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் தான்.
இந்தியாவுக்கு போட்டியாக இந்த நாடுகள், இலங்கையுடன் நெருங்கிப் போகின்றன அல்லது உதவிகளை அள்ளி வழங்குகின்றன. இந்தப் போட்டியை சமாளித்து இலங்கையை தன்பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கு இந்தியா தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதனால் தான், தமிழ்நாட்டின் எதிர்ப்புகளையும் மீறி இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளை இந்தியா வழங்கி வருகிறது. சீனா, பாகிஸ்தான், போன்ற நாடுகளை நெருங்க விடாமல், தனது அரவணைப்பில் இலங்கையை வைத்துக்கொள்ள இந்தியா எவ்வளவு முயன்றாலும், அதில் வெற்றிபெறுவது இலகுவான காரியமல்ல.
ஏனென்றால், இந்து சமுத்திரத்தின் முத்தாக உள்ள இலங்கை – இந்து சமுத்திரத்தில் ஆதிக்கப் போட்டியில் குதித்துள்ள சீனாவுக்கும் மிக முக்கியமானது. எனவே, இலங்கையைக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கு இந்த நாடுகளுக்கு இடையில் நடக்கும் போட்டி முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை. இது தொடரப்போகிறது. இதையே இலங்கையும் விரும்பும்.
சீன, பாகிஸ்தான் உறவுகளை உடைத்துக்கொள்வது ஒன்றும் சுலபமில்லை என்பது இந்திய இராணுவத் தளபதிக்கு இப்போதைய இலங்கைப் பயணம் கண்டிப்பாக உணர்த்துவதாக அமையும்.

கே.சஞ்சயன்


அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி மஹிந்த

Written By Unknown on Friday, November 23, 2012 | 12:25 PM

கஸகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கிருந்து அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கால் தங்கி சிகிச்சை பெற்றுவரும் பிரதமர் டி.எம்.ஜயரத்னவையும், ஜனாதிபதி தனது தனிப்பட்ட விஜயத்தின் போது பார்வையிடுவார் என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Written By Unknown on Sunday, November 18, 2012 | 11:28 AM


தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணுஉலை மின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தியும், இந்தத் திட்டத்தை எதிர்த்து இடிந்தகரை மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் நேற்று பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி என்ற கட்சியின் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மார்க்சியலெனினிசக் கட்சியின் தலைவர் சி.கா.செந்தில்வேல், கூடங்குளம் அணு உலையால் வரும் அணுக் கழிவுகளை, மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழ்வுக்காகத் தோண்டிய குழிகளில் போட்டு மூடிவிட திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் இலங்கையின் அதிகளவு மீன் வளத்தைக் கொண்டுள்ள மன்னார் கடல்படுக்கை பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்றார்.
சுற்றுச் சூழல் ஆர்வலர் ஐங்கரநேசன் பேசுகையில், எமது போராட்டத்துக்குத் தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், தமிழகத்தின் இடிந்தகரை மக்கள் நீண்ட நாள்களாகத் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இதுவரை நினைக்காதது எவ்வளவு பெரிய துரோகம் என்று கேள்வி எழுப்பினார்.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger