R News: முல்லைத்தீவு
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label முல்லைத்தீவு. Show all posts
Showing posts with label முல்லைத்தீவு. Show all posts

முல்லைத்தீவில் ஹர்த்தால்

Written By Unknown on Wednesday, July 10, 2013 | 4:40 PM

முல்லைத்தீவு நகரில் இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஈடுபடும் மீன்படி நடவடிக்கையை நிறுத்தக் கோரி மூன்று மீனவர்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றனது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக முல்லைத்தீவு நகரில் உள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, மீன்பிடி அமைச்சர் அல்லது அவரின் பிரதிநிதி அல்லது மாவட்ட செயலாளர் ஆகியோரில் ஒருவரினால் இது தொடர்பில் உறுதிமொழி வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண தேர்தலுக்கு ஜனாதிபதி அனுமதி

Written By Unknown on Friday, July 5, 2013 | 1:55 PM

வட மாகாண சபை தேர்லை நடத்துவதற்கான அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளருக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ளார்.
அத்துடன்  வடமேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷாத்துக்கு எதிர்ப்பு! முள்ளியவளையில் பைக்கோ இயந்திரங்களுக்கு குறுக்காக படுத்து மக்கள் போராட்டம்

Written By Unknown on Sunday, April 7, 2013 | 2:08 PM


மக்களுக்கான காணிப்பங்கீடு தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் போராட்டம் வெடித்தது. மக்கள் திரண்டு வந்து அமைச்சருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தனது பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கிச் சென்றார்.
காணியில்லாமல் 30 வருடங்களாக நாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஆதரவாளர்களுக்குக் காணிகளை பகிர்ந்தளிக்க முயற்சிக்கின்றார் என ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த மக்கள் குற்றஞ்சாட்டினர்.
முள்ளியவளை ஆறாவது மைல்கல் அருகில் 540 ஏக்கர் தேக்கங்காடு உள்ளது. இந்தக் காட்டை முற்றாக அழித்து அந்தப் பகுதியில் தனக்கு ஆதரவான ஆயிரத்து 445 குடும்பங்களைக் குடியேற்றுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்காக குறித்த பிரதேசத்தை நிலஅளவை செய்வதற்காக கடந்த மாதம் 21ம் திகதி நில அளவையாளர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களை நிலஅளவை செய்யவிடாமல் முல்லைத்தீவு மக்கள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பி அனுப்பினர்.
இவ்வாறானதொரு நிலையில் முல்லைத்தீவுக்கு நேற்று சனிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக அமைச்சர் ரிஷாத் சென்றிருந்தார். இதன்போது அமைச்சர் காட்டை அழித்து அந்தப் பகுதியில் தனது ஆதரவாளர்களை குடியேற்றும் திட்டத்தையும் ஆரம்பித்து வைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். இதற்காக அவரது ஆதாரவாளர்களும் அங்கு அமைச்சரால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
நேற்றுக்காலை குறித்த காட்டுப்பகுதியின் அருகே 5 பைக்கோ இயந்திரங்கள் சகிதம் அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கு வந்து இறங்கினர். இதனை அறிந்து கொண்ட முல்லைத்தீவு மக்கள் நேற்றுக் காலை 7 மணிமுதல் மேற்படி காட்டுப் பகுதியில் குவிந்தனர்.
எங்களுக்கு காணிகள் வழங்காமல் இந்தக் காட்டை வெட்ட முற்பட்டால் "பைக்கோ' இயந்திரங்களை அடித்து நொருக்குவோம்'' எனத் தெரிவித்து அமைச்சரின் ஆதரவாளர்களை எச்சரித்தனர் முல்லைத்தீவு மக்கள். அத்துடன் "பைக்கோ' இயந்திரங்களுக்கு குறுக்காக படுத்து அவற்றை நகரவிடாமல் செய்தனர்.
மக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் நேற்று நண்பகல் வரை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கு வரவில்லை. இறுதியில் நேற்று மாலை 4.30 மணியளவிலேயே அமைச்சர் ரிஷாத் அங்கு வந்தார். இதனையடுத்து அங்கு திரண்டிருந்த முல்லைத்தீவு மக்கள் அமைச்சருக்கு எதிராகக் கொந்தளித்தனர்.
கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 940 குடும்பங்கள் காணியில்லாமல் உள்ளனர். எங்களுக்கு காணிகளை வழங்காமல் உங்கள் ஆதரவாளர்களுக்கு இங்கு காணிகள் வழங்கவிட மாட்டோம்.
நாங்கள் அளித்த வாக்குகளில் தான் நீங்கள் அமைச்சரானீர்கள். இப்போது உங்கள் ஆதரவாளர்களுக்காக மாத்திரம் செயற்படக்கூடாது. அதற்காக நாங்கள் வாக்களிக்கவில்லை என்று மக்கள் ஒரே குரலில் திட்டவட்டமாகத் தெரிவித்து விடாப்பிடியாக இருந்தனர். மக்களின் கடும் எதிர்ப்புக்கு அமைச்சரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
மக்கள் அவரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்ததுடன் தமது முடிவிலும் உறுதியாக இருந்தனர். இதனால் ஒன்றரை மணி நேரமாக மக்களுடன் வாக்குவாதப்பட்ட அமைச்சர் ரிஷாத் இறுதியில் திங்கட்கிழமை (நாளை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரச அதிபருடன் கலந்துரையாடல் நடத்திவிட்டு முடிவைக் கூறுவதாக சொல்லி அங்கிருந்து பின்வாங்கிச் சென்றார். அவரின் ஆதரவாளர்களை குடியேற்றும் ஆரம்ப முயற்சியும் இதனால் பிசுபிசுத்துப்போனது.
இதேவேளை நேற்று குறித்த பகுதியில் படையினர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் எனப் பல நூற்றுக்காணக்கானோர் குவிக்கப்பட்டிருந்தனர். குறித்த இடத்தில் காட்டை அழித்துவிட்டு மக்களை குடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்திற்காய் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திற்கு இடையில் மோதல்!

Written By Unknown on Sunday, February 10, 2013 | 10:16 AM


முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டியெடுப்பதில், சிறிலங்காப் படை அதிகாரிகளுக்குள் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் உள்ளிட்ட 4 சிறிலங்காப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ஒருவர் தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றனர்.
பாரா 3 கப்பலின் சிதைவுகளை அண்டிய கடற்கரையில் அவர்கள் நிலத்தை தோண்டினர்.
அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள, சிறிலங்கா தேசிய காவல்படையின் 29வது பற்றாலியன் துருப்பினர் அதை அவதானித்து, அவர்களிடம் ஏன் தோண்டுகிறீர்கள் என்று விசாரித்தனர்.
தன்னை அடையாளம் காட்டிய லெப்கேணல், அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவு தங்கம் மற்றும் பணத்தை புதைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதுபற்றி தான் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாவும் தேசிய காவல்படையின் 29வது பற்றாலியன் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அதற்கு தமது முன்அனுமதி பெற்றே அங்கு தோண்ட வேண்டும் என்று தேசிய காவல்படை அதிகாரிகள் அவர்களுக்கு கூறினர்.
இதனால், இருதரப்புக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து தாம் வந்த டபிள்கப் வண்டியில் ஏறி லெப்.கேணல் மற்றும் மூன்று படையினரும் தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக தேசிய காவல்படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, தப்பிச் சென்ற லெப்.கேணல் மற்றும் படையினரைப் பிடிக்க வீதித் தடுப்புகள் போடப்பட்டன.
பன்சல்கட பகுதியில் போடப்பட்டிருந்த வீதித்தடையில் அந்த டபிள் கப் வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டபோது, அது வேகமாக செல்ல முயன்றது.
அங்கிருந்த சிறிலங்காப் படையினர் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் அதையும் மீறி அவர்கள் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்த 62-1 பிரிகேட் படையினருக்கு உத்தரவிடப்பட்டது.
அவர்கள் பராக்கிரமபுர பகுதியில் வீதிகளில் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
இதை அவதானித்த அந்த நால்வரும் வாகனத்தை நெடுங்கேணிப் பக்கம் திருப்பிக் கொண்டு தப்பிசென்ற போதும், 62-1வது பிரிகேட் படையினர் துரத்திச் சென்று கைது செய்து சிறிலங்கா இராணுவ காவல்த்துறையிடம் ஒப்படைத்தனர்.
லெப்.கேணல் உள்ளிட்ட நான்கு சிறிலங்காப் படையினரும் சிறிலங்கா இராணுவக் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
சோதனைச்சாவடியில் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறியதாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாழமுக்கம்: முல்லைத்தீவுக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் மையம்

Written By Unknown on Monday, October 29, 2012 | 8:31 PM

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தற்போது முன்னோக்கி முல்லைத்தீவுக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தாழமுக்கம் காரணமாக குறிப்பாக யாழ்ப்பாணம், திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கடலை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இன்று திங்கட்கிழமை முதல் நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதுடன் கடும் காற்றுவீசுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு கடற்கரையேரப் பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே மீனவர்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவில் பெய்த கடும் மழை காரணமாக ஒட்டுச்சுட்டானைச் சேர்ந்த 4000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான மழை பெய்து வருகிறது.

முல்லைத்தீவில் பெய்த மழையினால் ஒட்டுச்சுட்டான் - முல்லைத்தீவு வீதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுச்சுட்டானில் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியாவில் 48 வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறைந்தது 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. 

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு-ஆனந்தபுரம் குண்டொன்று வெடித்ததில் சிறுமி பரிதாபமரணம்

Written By Unknown on Sunday, October 28, 2012 | 8:48 AM


முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆனந்தபுரம் என்னுமிடத்தில் நேற்று சனிக்கிழமை குண்டொன்று வெடித்ததில் பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
ஆனந்தபுரம் 5 ஆம் வட்டாரத்தில் உள்ள பச்சை புல்மோட்டை என்னுமிடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
காணியில் மண்டிக்கிடந்த புல்லை வெட்டிச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்ற அவரது சகோதரியாகிய ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற சிறுமியே இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் மரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்புச் சம்பவத்தின்போது வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்த 28 வயதான அவரது மற்றுமொரு சகோதரி, சிதறிச் சென்ற குண்டின் பாகம் ஒன்று தாக்கியதில் காயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அயலவரான பெண் ஒருவர் தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர், உயிரிழந்த சிறுமி மண்ணில் கொத்திய அடையாளத்துடன் கிடந்த கத்தி ஒன்றைக் கண்டெடுத்துள்ளதுடன், இந்தக் கத்தியினால் பொருள் ஒன்றை கொத்தியபோதே குறித்த குண்டு வெடித்திருக்க வேண்டும் என்று ஊகம் தெரிவித்திருப்பதாக அயலவர்கள் கூறுகின்றனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பல கிராமங்களில் பற்றைகள் மற்றும் புற்களை வெட்டிச் சுத்தம் செய்யும்போது பொது மக்களால் கண்டெடுக்கப்படுகின்ற பல வகையான வெடிப்பொருட்களை இராணுவத்தினர் அகற்றிச் செல்வதாகவும், இதனால் தமது வாழ்க்கை ஆபத்து மிக்கதாக இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.
ஒரு சிறுமியை பலிகொண்டுள்ள இந்தச் சம்பவம் வெடிப்பொருட்கள் தொடர்பான மக்களின் அச்ச உணர்வை மேலும் அதிகரித்திருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் கூறினர்.

காட்டுப் பகுதி இராணுவ முகாம் முன்னால் காவல் நிற்கும் சிவில் பாதுகாப்பு ஊழியர்; ஒதுக்கப்பட்ட பணி குறித்து தெரியாமல் திணறல்

Written By Unknown on Saturday, October 20, 2012 | 3:38 PM

newsசிவில் பாதுகாப்பு அமைச்சினால் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நியமனம் பெற்ற 350 இளைஞர், யுவதிகள் எவ்வித வேலைகளும் வழங்கப்படாது, கைவேலி காட்டுப் பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் விடப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் "சிவில் பாதுகாப்பு ஊழியர்' என்ற பதவிக்கு வன்னிப் பகுதியில் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வெளியேறிய முன்னாள் போராளிகள் உட்பட 350 பேர் இணைக்கப்பட்டனர்.

கைவேலி, உடையார்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு எனப் பல்வேறு பகுதியிலிருந்து 250 யுவதிகளும், 100 இளைஞர்களும் தெரிவுசெய்யப்பட்டு நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.

இவர்களுக்கான பணிகள் எவையெனக் குறித்தொதுக்கப்படாது நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவரும் கைவேலி காட்டுப்பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் விடப்பட்டுள்ளனர்.

இவர்கள் தினமும் காலையில் 8.30 மணிக்கு அவ்விடத்தில் சென்று கூடியிருந்து கதைப்பதும் மாலை 5 மணியானதுடன் வீடு திரும்புவதுமாக உள்ளனர். இவர்களுக்கான வரவுப் பதிவுகளை அந்தப் பகுதியிலுள்ள இராணுவத்தினரே கவனித்து வருகின்றனர்.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்று தங்களை நியமித்து விட்டு இராணுவ முகாமுக்கு காவலுக்கு விட்டுள்ளார்களே என இவர்கள் பேசிக்கொள்வதை அவதானிக்க முடிந்தது.

ஆக்கிரமிப்பின் கரங்களால் அபகரிக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால்’

Written By Unknown on Saturday, October 13, 2012 | 4:27 PM

பெரும் போர்ந்து முடிந்து அழிவுகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் இன்று மெல்ல மெல்ல நிசப்தத்திலிருந்து மீளத்தொடங்கியிருக்கிறது. பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ3 5 வீதி புழுதியால் நிறைந்து கிடக்கிறது. இடைவிடாமல் செல்லும் கனரக வாகனங்கள் ஒருபுறம், தென்பகுதி யிலிருந்து முள்ளி வாய்க்காலைப் பார்க்கச் செல்வோர் ஒருபுறம், புதுக்குடியிருப்புச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடத்தைப் பார்க்கச் செல்வோரென ஏ35வீதி தினமும் பரபரப்பாக இருக்கிறது. 

ஆளரவமற்று உடைந்து சிதைந்து கிடக்கும் வீடுகள், எரித்தும் வெட்டப்பட்டும் தலையற்றுக் கிடக்கும்; பனை மரங்கள், இடிபாடுகளைச் சுமந்து நிற்கும் சந்தை மற்றும் பாடசாலைக் கட்டிடங்கள், எரித்தும் நொறுக்கியும் குவிக்கப்பட்டு குவியல்களாய்க் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வாகனங்கள், தகர்ந்தும் எரிந்தும் தூர்ந்துபோய்க்கிடக்கும் பங்கர்கள், பத்து மீற்றர் இடைவெளியில் நிற்கும் படையினர் என மரணங்களால் மலிந்தநிலம் மனிதப்பேரவலத்தின் நினைவுகளை தற்பொழுதும் நினைவூட்டியவாறு காட்சியளிக்கிறது.

முள்ளிவாய்க்கால் கரையோரத்தை உள்ளடக்கிய 22 கிலோ மீற்றர் கடற்கரைப் பிரதேசத்தை இயற்கை சுற்றுலா வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்குரிய முயற்சிகளை தற்பொழுது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாயாறு தொடங்கி அளம்பில் வரையான 22 கிலோ மீற்றர் கரையோரப் பகுதியே சுற்றுலா வலயமாகப் போகிறது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை அளவீடு செய்யும் பணிகளை அரச நில அளவைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்திலேயே இந்தக் கரையோரப் பகுதியை இயற்கை சுற்றுலா மையமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இந்தக் கரையோரத்தில் காணிகளைக் கொண்டுள்ள தனியார் விரும்பினால் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வர்த்தகஅல்லது முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதிப்பதென அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவலொன்று தெரிவிக்கிறது. சுற்றுலா வலயமாக அறிவிக்கப்படவுள்ள இந்தப் பகுதியிலேயே அம்பலவன் பொக்கணை, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, மாத்தளன், புதுமாத்தளன், வலைஞர்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகளும் உள்ளடங்குகின்றன. வன்னியில் மனிதப் பேரவலத்தை உருவாக்கிய இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பகுதிகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். பலர் இந்தப் பிரதேசத்திலேயே உயிரிழந்தும் இருந்தனர்.

குறுதியாறு ஓடிய நிலத்தில் இன்னமும் கலையாது கிடக்கும் அழிவின் அடையாளங்களும் இப்பொழுது கூட சுவாசத்தில் கலக்கும் மரணநெடியும் மனிதப் போர வலத்தை நினைவூட்டி நிற்கின்றது. எமது உறவுகள் வாழ்ந்த நிலம் இது. அழிவுகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டிருக்கும் இப்புனித பூமியை இன்று சுற்றுலா வலயமாக்கும் அரசின் திட்டம் மனதின் வலிகளை மீண்டும் கிளறி வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அழிவுகளைச் சந்தித்து துவண்டுபோன வன்னி நிலம் இன்று ஆக்கிரமிப்பின் அதிகார கரங்களுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது. வடக்கில் தாம் தற்போது நிலைகொண்டுள்ள இடங்களிலுள்ள காணிகளைக் கையகப்படுத்தி வரும் படையினர், இறுதிப் போர் நடைபெற்ற முள்ளி வாய்க்காலில் மட்டும் 17.5 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கான அனுமதியை வழங்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. போரின் இறுதி நாள்களில் ஆயிரக்கணக்கான எமது உறவுகள் அடைக்கப்பட்டிருந்த இடமே முள்ளிவாய்க்கால். இன்று சர்வதேச ரீதியில் எழுப்பப்படும் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் அனேகமானவை இந்தப் பகுதியிலேயே இடம்பெற்றிருக்கின்றன. 

இந்தப் பகுதியிலேயே போரின் இறுதி நாள்களில் ஆயிரக்கணக்கான உறவுகள் பலியாக்கப்பட்டனர். 

இங்கு பெரும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சந்தேகம் வெளியிட்டு வரும் நிலையிலே 17.5ஏக்கர் நிலத்தை படையினர் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி நிற்கின்றது.

இது இவ்வாறிருக்க முள்ளிவாய்க்காலில் வாழ்ந்த மக்களில் உயிரிழந்தவர்கள் போக எஞ்சியவர்கள் தற்பொழுது நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். தமது சொந்த இடத்திற்குச் சென்று எப்பொழுது வாழ்வோம் என்ற எதிர்பார்ப்புடன் இவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கினறன. முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றத்துக்கென அழைத்து வரப்பட்ட போதும், இதுவரை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலேயே தங்க வைக்கப் பட்டுள்ளனர். தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற அனுமதிக் காமையானது தமது பிரதேசங்களை படையினர் ஆக்கிரமிக்கும் ஒரு திட்டமாக இருக்கலாம் என இவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கோம்பாவில், திம்பிலி பகுதிகளில் கடந்த வருடத்தின் இறுதியில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டன. 

இங்கு முள்ளிவாய்க்கால் மேற்கைச் சேர்ந்த 96 குடும்பங்கள் உட்பட இதுவரை 206 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டே இங்கு அழைத்து வரப்பட்டனர். எனினும் இன்றுவரை சொந்த இடங்களில் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் மேற்கில் 19 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இதுவரையில் அவர்களுக்கு குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் எவையுமே செய்து கொடுக்கப்படவில்லை.

மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தாம் சென்று வாழ்வதற்கு இந்த மக்கள் அனுமதி கோரியிருந்தும் அதற்கான அனுமதியை வழங்க படையினர் மறுத்துவிட்டனர். காலை முதல் மாலை 5 மணிவரையில் மக்கள் தமது இடங்களை பார்வையிடுவதற்கு மட்டும் படையினரால் அனுமதி வழ்ங்கப்பட்டுள்ளது. 

மாலை5.00 மணியின் பின்னர் மக்கள் யாரும் அங்கு நிற்கவோ நடமாடவோ அனுமதியில்லை. வெடிபொருட்கள் அபாயமே இதற்கு காரணம் என படையினர் கூறியிருந்தாலும் கைவிடப்பட்ட வீடுகளில் மீதமாகவுள்ள பகுதிகளும், பெறுமதியான மரங்களும் இரவுவேளையில் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதே உண்மை. இரவு வேளைகளிலேயே இச்செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்காகவே மாலை 5.00மணியின் பின்னர் பொதுமக்களுக்கான அனுமதி மறுக்கப்படுகிறது.

இதேவேளை திம்பிலி பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அடிப்படை வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லையென தெரியவருகிறது. சில மாதங்கள் வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகமும் தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் கூட இம்முகாமிற்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திம்பிலி பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அந்தப் பகுதியிலேயே கால் ஏக்கர் நிலம் வழங்கப்படும். நிரந்தரமான தொழில் வசதி செய்து கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

எனினும் இன்றுவரையில் அந்த வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை யென முகாமிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக கொண்ட இம் மக்கள் தற்போது கடலே இல்லாத பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்;. தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்லவேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர்; நினைவிலும் எழுந்து நிற்கின்றது.

அழிவுகளாலும் இழப்புகளாலும் துவண்டுபோய்க்கிடக்கும் இம்மக்களின் ஒரே விருப்பம் தாம் வாழ்ந்த சொந்த நிலத்தில் மீண்டும் வாழ வேண்டுமென்பதே, ஆனால் அரசாங்கமோ ஆண்டாண்டுகாலம் இவர்கள் வாழ்ந்த நிலங்களை வெளிநாட்டு  நிறுவனங்களுக்கு விற்று சம்பாதிக்க முயற்சிகளை யெடுத்து வருகின்றது.

அதன் ஒருகட்டம்தான் சுற்றுலாவலய நாடகம். அதைக் காரணம் காட்டி பெருமளவாக தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படப்போகின்றன. எமது வளம் இன்னும் சுரண்டப்படப் போகின்றது. அதுமட்டுமின்றி படையினரும் மிகப்பாரிய படைத்தளங்களையும், இராணுவ மையங்களையும் அமைப்பதற்காகவும் தாமும் தமது குடும்பத்தினரைக் கொண்டுவந்து குடியேற்றுவதற்காகவும் ஏக்கர் கணக்கிலான நிலங்களை அபகரிக்க முயன்று வருகின்றனர். 
இறுதி யுத்தம் தனது கோரத்தாண்டவத்தை நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் நிலத்தில் எமது உயிர்களை பெரும் விலையாகக் கொடுத்திருக்கிறோம். அவலங்களாலும்;, மரணஓலங்களாலும் நிறைந்த நிலம் இது. சீறிவரும் எறிகணைகளை நெஞ்சிலே சுமந்து வித்தாய் வீழ்ந்த எம் உறவுகளின் குருதிகள் இன்னும் காயவில்லை. அவலச்சாவுகளால் இன்னும் இப்புனிதபூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது ஆத்மாக்களின் ஓலம் இன்னும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. 

கந்தகப் புகைகளின் நெடியும் காய்ந்துபோன குருதிகளின் நெடியும் எம் நாசிவழியாக உணர்வுகளைத் தூண்டிச் செல்கின்றன. இழந்தவைகள் போக எங்களை வாழவைத்த எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பின் கரங்களிலிருந்து மீட்க என்ன செய்யப் போகின்றோம் என்ற கேள்வி இன்று எம்முன்னே பிரம்மாண்டமாய் வியாபித்து விரிந்து நிற்கின்றது.

-நிலவன்-
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger