R News
Headlines News :
Powered by Blogger.

Latest Post

இலங்கை தொடர்பிலான ஐ.நா அறிக்கை செப்ரெம்பரில் சமர்ப்பிக்கப்படும்.- ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர்.

Written By Unknown on Tuesday, June 16, 2015 | 3:40 PM

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையினை ஐ.நா பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை தொடர்பிலான ஐ.நா அறிக்கை செப்ரெம்பர் மாதக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படுமென ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட்ராட் அல் ஹூசேன் மீள உறுதிப்படுத்தியுள்ளார். 


பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை வரும் செப்ரெம்பர் கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்பினையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் வெளிப்படுத்தியுள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வின் தொடக்க உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் தனது உரையில் இலங்கையின் புதிய அரசாங்கம் அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீளப் புதுப்பிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். 
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நம்பகமான பொறிமுறைகளை உருவாக்கும் போது வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தொடர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லதா மீது பிரபல திரைப்பட நிறுவனம் புகார்.

கோச்சடையான்' படத்தை வெளியிட 6.84 கோடி ரூபாய் கடன் கொடுத்த நிறுவனம் பணம் திரும்ப கிடைக்காததால் நடிகர் ரஜினி மனைவி லதா மீது பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளது. அதன்படி மோசடி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ரஜினி நடித்த 'கோச்சடையான்' படத்தை தயாரித்த 'மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனம் முதலில் படத்தை வெளியிட முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியது.இதனால் படத்தை முடித்து திரையிட 'ஆட் பியூரோ' நிறுவனத்திடம் 6.84 கோடி ரூபாய் கடன் கேட்டது. இதற்கு ரஜினி காந்தின் மனைவி லதா பெங்களூரில் உள்ள தன்னுடைய சில சொத்துகளை உத்தரவாதமாக காண்பித்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.இதற்கான ஒப்பந்தத்தின் போது 'ஆட் பியூரோ' நிறுவனத்துக்கு 'கோச்சடையான்' திரைப்பட உரிமையை வழங்குவதாக மீடியா ஒன் குளோபல் நிறுவன இயக்குனர் மனோகர் ஒப்புக் கொண்டுள்ளார்.


பட உரிமை வழங்கவில்லைஆனால் 'தங்களிடம் வாங்கிய பணத்தை லதா கொடுக்கவில்லை. ஒப்பந்தப்படி திரைப்பட உரிமையை கொடுக்காமல் 'ஈராஸ் சர்வதேசம்' நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை அளித்தனர். லதா உத்தரவாதம் அளித்திருந்த சொத்துகள் பற்றி விசாரித்த போதும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை' என ஆட் பியூரோ நிறுவனம் தெரிவித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆட் பியூரோ நிறுவனம் பணத்தை திருப்பி தருமாறு லதாவிடம் கேட்டது.
பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுப்பதாக அந்நிறுவனத்துக்கு லதாவும் உறுதியளித்தார்.நீதிமன்றத்தில் வழக்கானதனால் அவர் கூறியபடி பணம் கொடுக்காததால் ஆட் பியூரோ நிறுவனம் கடந்த 6ம் திகதி பெங்களூர்  மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் லதா மீது எப்.ஐ.ஆர்.இபதிவு செய்யுமாறு பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் லதா ரஜினி மீது மோசடி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சங்கக்கார ஒய்வு

இந்திய இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதற் போட்டியுடன் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணி வீரர் குமார் சங்ககார உறுதி செய்துள்ளார்.இதன்படி அவர் இன்னமும் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடவுள்ளார்.

பாகிஸ்தான் தொடரில் 2 போட்டிகளில் மாத்திரமே தான் விளையாடுவேன் என தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ள சங்கா காலியில் நடைபெறவுள்ள இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடருடன் தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குமார் சங்ககார அறிவித்த போதும் இலங்கை கிரிக்கெட்டின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்தார்.முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள போதும் குமார் சங்ககாரவின் சொந்த ஊரான கண்டியில் பல்ளேகல மைதானத்தில் நடாத்தவும் வாய்ப்புகளும் உள்ளன.
 ஆனால் காலியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டகுமார் சங்ககார அதே மைதானத்தில் ஓய்வு பெறும் வாய்ப்புகளும் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
                                                                      

தென்கொரியாவுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடத் தயார்.- வடகொரியா அறிவிப்பு.

அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுவதைக் கைவிட்டால் தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பதாக வட கொரியா திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

வட கொரிய – தென் கொரியத் தலைவர்கள் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலான கூட்டுத் தீர்மானம் இயற்றப்பட்டதன் 15-ஆவது ஆண்டு நிறைவையொட்டி வட கொரியா இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கூறியதாவது.பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் சூழல் அமைவது அவசியம். அத்தகைய சூழல் அமைந்தால் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதில் எந்த அர்த்தமுமில்லை என வடகொரியாஅரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் .

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிபிட் மாவட்டம் ஹைதர் கான் என்ற பத்திரிகையாளர் நான்கு பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது. பின்னர் தங்களது காரின் பின்புறம் ஹைதர் கானை கயிறால் கட்டி, சுமார் நூறு மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பத்திரிகையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அவர் எழுதி வந்ததால், ஆத்திரமடைந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜே.கே.ஷாகி தெரிவித்தார்.
கடந்த வாரம் பேஸ்புக்கில் அமைச்சரை விமர்சித்த பத்திரிகையாளர் ஜிதேந்தரா சிங் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

8 நிறுவனங்களின் நூடுல்ஸ்களில் அதிக இரசாயன கலப்பு

டெல்லியில் நடந்த ஆய்வில் 12 வகை நூடுல்சில் 8 நிறுவனங்களின் நூடுல்ஸ்களில் அதிக இரசாயன கலப்பு இருப்பதும் மற்றும் அவை தரமற்று இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த உணவுப் பொருட்களை தடை செய்வது பற்றி டெல்லி மாநில அரசு ஆலோசித்து வருகிறது.


இந்தியாவில் நெஸ்லே நிறுவனம் தயாரித்த மெகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் அதிக இரசாயன கலப்பு இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மெகி நூடுல்ஸ் விற்பனைக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகை உணவுப் பொருட்களையும் பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் நாடெங்கும் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
நூடுல்ஸ் வகைகளில் 12 நிறுவனங்களின் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சோதிக்கப்பட்டன. டாப்ராமன், சிங்ஸ், டாப்ஸ் ஆகிய நூடுல்ஸ்களும் சோதிக்கப்பட்டன.
இந்த நிலையில் பாக்கெட் உணவு வகைகளில் சிலவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனம் தனது மேகி நூடுல்சை மீண்டும் சோதித்தது. இந்த சோதனையில் மெகி நூடுல்ஸ் தரமானதாக உள்ளதாக கூறியுள்ளது. ஆனால், இதை மத்திய அரசு ஏற்குமா என்று தெரியவில்லை.
இந்த நிலையில் நெஸ்லே நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக மெகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முதல் இன்னிங்சில் இந்தியா வலுவானை நிலை: பதற்றமான நிலையில் பங்களாதேஷ்

Written By Unknown on Sunday, June 14, 2015 | 10:41 AM

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 462 ஓட்டங்கள் வலுவான நிலையில் உள்ளதோடு பங்களாதே சற்றுமுன்னர் வரை தனது முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை பெற்று தடுமாறுகின்றது.

விக்னேஸ்வரன் அரசியல் சூழலை மாற்றுவாரா?; சூழல் அவரை மாற்றுமா?

Written By Unknown on Thursday, July 25, 2013 | 2:20 PM

வட மாகாண சபைத் தேர்தல் நெருங்கி வரும் போது மேலெழுந்து வந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்கு எதிரான குரல்கள் படிப்படியாக மங்கிவிட ஆரம்பித்துள்ளன.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளிடமிருந்து பறிக்காமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என சவால்விட்ட அமைச்சர் விமல் வீரவன்ச இப்போது தமது கட்சி வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மட்டும் கூறி வருகிறார். 

தமது கொள்கைக்கு பொருந்தாததினால் வட மாகாண சபைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாவிட்டால் மாகாண சபை முறைக்கே அவரது கட்சி எதிரானது என்பதால் ஏனைய மாகாண சபைகளில் இருந்தும் அவரது கட்சி உறுப்பினர்களை அவர் விலக்கிக்கொள்வாரா? 

வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக அனேகமாக செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் ஒரே ஒரு முதலமைச்சர் வேட்பாளர் மடடுமே இப்போதைக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்து. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மட்டுமே அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு வித்தியாசமான நியமனம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பொதுவாக சட்டத்துறையில் உள்ளவர்கள் அரசியலுக்கு வந்த போதிலும் நீதிபதிகள், நீதியரசர்கள் அரசியல் களத்தில் இறங்குவதில்லை. அவ்வாறு வந்தாலும் ஏற்கனவே அரசியல் தொடர்பு இருந்தால் மட்டுமே அவ்வாறானவர்கள் அரசியலுக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் வட மாகாண சபைக்கு போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஆனால் அவர் முதலமைச்சர் வேட்பாளரா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

அவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அன்று அரச இயந்திரத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் இன்று அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடுகிறார். அன்று அரச இயந்திரத்தின் ஒரு அம்சமான நீதித்துறையை பிரதிநிதித்துவப்படுத்திய நீதியரசர் விகனேஸ்வரன், அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிடுகிறார். எப்படி இருக்கிறது?

விகனேஸ்வரன் அறிவுள்ளவர், பண்பானவர், கௌரவமானவர் என்பதை எவரும் மறுக்கப்போவதில்லை. தமிழ் கூட்டமைப்பு அவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்ததை அடுத்து பண்பானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றதோர் கருத்து சிங்கள சமூகத்திலும் தோன்றியுள்ளது. ஆனால் அக்கருத்து தொட்டிலிலேயே இறந்துவிடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம். 
-தமிழ் மிரர்

எவ்வளவு தான் பண்பானவராகவும் அறிவுள்ளவராகவும் கௌரவமானவராவும் இருந்த போதிலும் விக்னேஸ்வரன் அரசியலில் எவ்வளவு தூரத்திற்கு மிளிர்வார் என்பதை காலம் தான் கூற வேண்டும். ஏனெனில் சட்டத் துறையில் நிபுணராக இருந்த போதிலும் அரசியலில் உள்ள அநாகரிகத் தன்மை சட்டத் துறையின் அநாகரிகத் தன்மையைப் பார்க்கிலும் படுமோசமானது என்பதை அவர் உணரவில்லைப் போலும். 

சட்டத்துறையில் எதற்கும் ஒரு வரம்பு (சட்ட வரம்பு) இருக்கிறது. அரசியலில் எந்த அநாகரிகத்திற்கும் வரம்புகள் இருப்பதாக தெரியவில்லை. சட்டமா அதிபரோடு கலந்துரையாடி சில விடயங்களை செய்துகொள்ள முடியும் என அவர் டெய்லிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் கூறியிருந்தார். அரசாங்கம் அவருக்கு அவ்வளவு இலகுவாக செயற்பட இடமளிக்கும் என்று ஊகிக்க முடியாது. 

அவரது இந்த கூற்றை வாசிக்கும் போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஞாபகம் வந்தது. அவரும் படு பயங்கர போர் களத்திலும் காணாதவற்றை அரசியலில் கண்டுவிட்டார். பயங்கர போர் களத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் அரசியலுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

எற்கனவே அமைச்சர் வீரவன்ச, விக்னேஸ்வரனை பிரிவினைவாதியாக்கிவிட்டுள்ளார். ஆயுத பலத்தில் தனித் தமிழ் நாட்டை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இப்போது சட்டத்தின் மூலமாக அதனை பெறுவதற்காக சட்ட வல்லுநர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர் என அவர் கூறயிருக்கிறார். 

விக்னேஸ்வரனை அல்லாது வேறு எவரையாவது தமிழ் கூட்டமைப்பு நிறுத்தியிருந்தால் அவர் அந்த வேட்பாளரிலும் எதையாவது பயங்கரத்தை கண்டுபிடித்து விடுவார். இவர் போன்றோர் மறந்து விட்ட அல்லது விளங்கிக் கொள்ளாத முக்கிய விடயம் என்னவென்றால் பிரிவினையை நாடியவர்களை நாட்டின் ஐக்கிய கட்டமைப்பிற்குள் வைத்திருப்பதற்காகவே அதிகார பரவலாக்கல் சித்தாந்தத்தை அதன் சிற்பிகள் நூறாண்டுகளுக்கும் முன்னர் பிரேரித்தனர். 

அதாவது அதிகார பரவலாக்கலின் நோக்கமே மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சிக்கு பிராந்திய சபைகளின் அதிகாரத்தை வழங்குவது அல்ல, பிரிவினையை கோரும் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதே. 

எப்போதோ ஒரு நாள் பிரிவினையை கோரிய மக்கள் தேசிய கட்சிகளை அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறானதோர் நிலைமையே உண்மையான நல்லிணக்கம் என்றழைக்கப்படலாம். ஆனால் அந்த நிலைமையை பலவந்தமாக உருவாக்க முடியாது. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட மக்கள் தேசிய கட்சிகளை நிராகரிக்கலாம். 

ஆனால் அம்மக்களை வென்றெடுப்பது தேசிய கட்சிகளின் திறமையில் தங்கியிருக்கிறது. ஆனால் அதிகார பரவலாக்கலின் நோக்கத்திற்கு முரணாக செயற்படுவதன் மூலம் அதனை சாதிக்க முடியாது. பிரிவினையை கோரிய மக்களின் பிரிதிநிதிகளும் அதிகார பரவலாக்களை துஷ்பிரயோகம் செய்யாது பெரும்பான்மையினரை வென்றெடுக்க முயல வேண்டும். நடைமுறை எதுவாக இருந்தாலும் சித்தாந்தம் அவ்வாறு தான் கூறுகிறது.

விக்னேஸ்வரன் ஒருபோதும் தனி நாட்டை கோரியவரல்லர். அவரது சட்ட அறிவை பாவித்து தமிழீழத்தை பெறுவதாக இருந்தால் அதற்காக அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மற்றொரு முதலமைச்சர் வேட்பாளருக்கு அவரது சட்ட அறிவை வழங்கலாம்.
 
விக்னேஸ்வரனின் அரசியல் களமிறங்களை அரசாங்கம் பாரதூரமாக கருத்திற் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே தான் அவரும் கவனமாக அடி எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. 

பெரிய 'கார்ட்' களை போட்டு விளையாட முற்படுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பலத்தை உணர்ந்திருப்பது தெளிவாகிறது என அமைச்சர் டிலான் பெரேரா கடந்த வியாழக்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றின் போது கூறியிருந்தார். ஆனால் அக்கூற்றின் மூலம் அரசாங்கமும் விக்னேஸ்வரன் பெரிய 'கார்ட்' என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. 

நீதிபதிகள், நீதியரசர்கள் அரசியலுக்கு வருவது நாகரிகமா என்ற கேள்வியும் இங்கு எழாமலில்லை. அவ்வாறானவர்கள் அரசியலக்கு வருவதனால் அவர்கள் நீதிபதி ஆசனத்தில் இருந்து வழங்கிய தீர்ப்புக்கள் சம்பந்தமாக சிலர் சந்தேகம் கொள்ளலாம்.

மறுபுறத்தில் அவ்வளவு சமூகப்பற்று அல்லது ஜனநாயகப் பற்று இருந்தால் அவ்வாறானவர்கள் பதிவியில் இருந்த காலத்தில் அதனை உதறித் தள்ளிவிட்டு அரசியலுக்கு ஏன் வரவில்லை என்றும் வேறு சிலர் கேட்கலாம். 

அரசாங்கம் நீதியரசர்களுக்கும் முப்படைகளில் மூத்த அதிகாரிகளுக்கும் அவர்கள் ஓய்வு பெற்ற பின் பல பதவிகளை வழங்குவதன் மூலம் ஏற்கனவே அவர்களது பதவிக் காலம் பற்றிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே நீதியரசர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பின் பதவிகளை வழங்குவதை அரசாங்கள் நிறுத்த வேண்டும் என அண்மையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரியவும் கூறியிருந்தார்.

இருந்த போதிலும் பண்பானவர்கள் அறிவுள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை சமூகம் ஊக்குவிகக் வேண்டும.; ஏனெனில் இன்று அரசியல் சுத்த சாக்கடையாக மாறியிருக்கிறது. அது வெறுமனே பணம் சம்பாதிப்பதற்கான (பகற் கொள்ளைக்கான) அனுமதிப் பத்திரமாகவே உள்ளது. 

போதாக்குறைக்கு பிரதேச மட்டத்திலும் அரசியல்வாதிகளின் கப்பம், கற்பழிப்பு, கொலை, தாக்குதல்கள், இலஞ்சம் போன்ற குற்றச் செயல்கள் ஊடகங்களில் வராத நாளே இல்லை. ஒரு நாளும் தொழிலொன்றை செய்யாதவர்கள் அரசியலுக்கு வந்து கோடிக் கணக்கு பணத்தை வீசி விளையாடுகிறார்கள். 

கப்பம், கற்பழிப்பு, கொலை, தாக்குதல்கள், இலஞ்சம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள தமது கட்சியைச் சேர்ந்தவர்களினால் தமக்கு வெளியில் தலைக் காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே கூறுகிறார். ஆனால் அதற்கு அக்கட்சியின் தலைவர்களே தான் போறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர மேர்வின் சில்வா பகிரங்கமாகவே ஒரு அரச அதிகாரியை மரத்தில் கட்டி வைத்தார். அது தொடர்பான ஒழுக்க விசாரணையின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவர் குற்றவாளியல்ல என தீர்ப்பளித்தது. ஊடக நிறுவனங்களை தாக்கியவர்கள் தண்டிக்கப்படவில்லை. துமிந்த சில்வா இன்னமும் ஐ.ம.சு.கூட்டணியன் நாடாளுமனற உறுப்பினராக இருக்கிறார். 

ஒரு ஆசிரியையை பகிரங்கமாக முழந்தாளிடச் செய்த மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீ.ல.சு.க.வின் வேட்பாளர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். பி.பி. ஜயசுந்தர அரச பதவிகளை ஏற்கக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றமே மீண்டும் அவர் அரச பதவி ஏற்கலாம் என்று தீர்ப்பளித்தது. தாம் ஒரு கொலையாளி என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அணமையில் கூறியிருந்தார். அவர் இவ்வளவு காலம் எவ்வாறு தப்பியிருந்தார? இந்த பட்டியல் பல பக்கங்களாக நீடிக்கலாம். 

எனவே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வேறு எவரையும் குறைகூறிப் பயனில்லை. இதே நிலைமை தான் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக் காலத்திலும் நாட்டில் நிலவியது. எனவே பண்பானவர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்க்கத்தக்க விடயமாகும். ஆனால் சமூகத்தை திருத்த அரசியலில் பிரவேசித்த பலர் இறுதியில் அந்த சாக்கடை அரசியலின் றிரந்த பிரதிநிதிகளாகியுள்ளனர். 

அரசியல்வாதிகள் இந்த நிலைமையை சீர் செய்வார்கள் என்று கருதுவது முட்டாள் தனமேயல்லாமல் வேறொன்றுமல்ல. மக்களும் இந்நிலைமையை உணர்நது பண்பானவர்களை மட்டுமெ தெரிவு செய்வோம் என்ற முடிவுக்கு வர வேண்டும். 

அதுவும் இப்போதைக்கு சாத்தியம் என்று தெரிவதில்லை. ஈரான் போன்ற நாடுகளில் என்றால் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ஒருவரது நடத்தை சிறந்ததாக இருக்க வேண்டும என சட்டமே கூறுகிறது. ஆனால் இங்கு அவ்வாறான சட்டம கொண்டு வரப் போவத யார்?

மேனன், கோத்தபாய, நசீம் உடன்பாடு! சீனாவின் திட்டத்தை முறியடிக்குமா?

Written By Unknown on Sunday, July 14, 2013 | 12:06 PM

இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான இரண்டாவது கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றிருந்தது.
இதற்காகவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்,  ஆறு உயர்மட்ட அதிகாரிகளுடன் கொழும்பு வந்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான முத்தரப்புக்கூட்டம் என்று இது கூறப்பட்ட போதிலும் இதில் பங்கேற்ற மூன்று நாடுகளினது பிரதிநிதிகளிலும் சிவ்சங்கர் மேனன் மட்டும் தான். அந்தப் பதவியை வகித்து வருபவராவார்.
இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்ற கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருப்பவர்.
மாலைதீவின் சார்பில் பங்கேற்ற மொஹமட் நசீம் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிப்பவர்
இந்த முத்தரப்பு மாநாட்டில் முக்கியமாக ஆராயப்பட்ட விடயம் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான விடயமே.
அண்மைக்காலத்தில் ஜப்பானுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்ட இலங்கை அரசாங்கம் அதையடுத்து சீனாவுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடு ஒன்றையும் செய்து கொண்டது.
அந்த உடன்பாட்டின் அம்சங்கள் என்ன என்பதை இரு நாடுகளும் வெளியிடாமல் மறைத்து வருகின்றன.
இத்தகைய பின்னணியில் தான் இந்தியா மாலைதீவுடன் இணைந்து முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
சிவ்சங்கர் மேனன் கொழும்பு பறப்பட முன்னர் புதுடில்லியில் உள்ள அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டித் தகவல் வெளியிட்ட இந்திய ஊடகங்கள் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீட்டை முறியடிக்கும் ஒரு நகர்வாகவே இலங்கை மாலைதீவுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தன.
இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னரும் கூட இந்திய ஊடகங்கள் கடல்சார் பாதுகாப்பு விடயத்தில் இந்தியப் பெருங்கடலில் இந்தியா தலைமைப் பாத்திரம் வகிக்கவுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த கடல்சார் பாதுகாப்பு ஒத்தழைப்பு உடன்பாடு இந்தியா குறிப்பிடுவது போன்று இந்தியப் பெருங்கடலில் அதன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கோ சீனாவின் தலையீடுகளை முறியடிப்பதற்கோ போதுமானதொன்றாக இருப்பதாகத் தெரியவில்லை.
பிரதானமாக இந்த உடன்பாடு இயற்கை அனர்த்தங்களின் போதான மீட்பு பயிற்சி கண்காணிப்பு மாசு கட்டுப்பாடு சுனாமி எச்சரிக்கை சட்டவிரோத கடல்சார் செயற்பாடுகள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது கடற்கொள்ளை முறியடிப்பு போன்ற விடயங்களில் தான் கவனம் செலுத்தியுள்ளது.
இதற்கு அப்பால் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பொருளாதார கடல் வலயத்தை தேவைப்படும் போது கண்காணிப்பதற்கு இந்தியா தனது வளங்களை வழங்கவுள்ளது.
இவைதான் இந்த முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் முக்கியமான அம்சங்கள்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீடுகளை முறியடிப்பதற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் இந்த உடன்பாடு கொண்டுள்ளதாக இந்தியாவினால் ஒருபோதும் திருப்தியடைய முடியாது.
இந்தியா இதைவிடமும் அதிகமான ஒத்துழைப்புகளை இலங்கையிடம் இருந்தும் மாலைதீவிடம் இருந்தும் எதிர்பார்க்கிறது என்பது இரகசியமான விடயம் அல்ல.
ஆனால் சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ள இலங்கையும் மாலைதீவும் தற்போதைய நிலையில் இதற்கு அப்பால் சென்று இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதை விரும்பவில்லை.
அதனால் தான் இந்தியா எதிர்பார்த்தளவுக்கு வலிமையான உடன்பாடு கடந்த வாரம் கையெழுத்திடப்படவில்லை.
எனினும் தற்போதைய நிலையில் இந்த நாடுகளுடன் வலுக்குறைந்த உடன்பாடு உன்றையேனும் செய்வதில் இந்தியா அக்கறை காட்டியது.
ஏனென்றால் இந்த இடைவெளியை சீனா போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொண்டு விடக்கூடாது என்ற கரிசனை தான் அதற்குக் காரணம்.
சீனாவின் நகர்வுகளை முறியடிக்கும் இந்தியாவின் மூலோபாயத்திட்டம் நெருக்கடியானதொரு கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில் தான் இந்த உடன்பாடு கையெழுத்தாக்கியுள்ளது.
சீனாவின் முத்துமாலை வியூகத்தை உடைப்பதற்காக ஈரானின் சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் முயற்சி தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு கடல்வழியாக ஆப்கானிஸ்தானையும் மத்திய கிழக்கையும் அடைவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.
ஆப்கானிஸ்தானில் இந்தியா பெரிய முதலீடுகளை செய்துள்ள நிலையில் அதற்கான விநியோகப்பாதை இல்லாதிருப்பது இந்தியாவுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை அனுப்ப இந்தியாவுக்குப் பாகிஸ்தான் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில்   அரபிக் கடலுக்குள் செல்லும் பாதையிலும் இந்தியாவுக்குத் தடைகள் ஏற்பட்டன.
இந்தநிலையில் தான் குவடார் துறைமுகத்தில் இருந்து வெறும் 76 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின் சபஹார் துறைமுகத்தை 100 மில்லியன் டொலர் செலவில் அபிவிருத்தி செய்ய இந்தியா முன்வந்தது.
ஈரானுடன் இந்தியா சில வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட இந்த உடன்பாடு சீனாவுக்கு எதிரான இந்தியாவின்  நகர்வுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டது.
இதன்மூலம் மத்திய கிழக்கிற்கான ஒரு வாசலை இந்தியாவினால் திறந்துவிட முடிவதுடன் ஆப்கானிஸ்தானுக்கான விநியோக வழியையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்பட்டது.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா செலவிட முன்வந்த 100 மில்லியன் டொலருக்கு இணையான நிதிஉதவித் திட்டம் ஒன்றை ஈரானுக்கு வழங்க சீனா முன்வந்துள்ளது.
இதனால் சபஹார் துறைமுக அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடம் இருந்து கைநழுவிப் போய் விடலாம் என்ற அச்சம் புதுடில்லிக்கு எழுந்துள்ளது.
சபஹார் திட்டம் கைநழுவினால் அது இந்தியாவின் முறியடிப்பு மூலோபாயத்துக்கு கிடைத்த பெரும் பின்னடைவாக அமையும்.
இந்தச் சூழ்நிலையில் தான் இலங்கை மற்றும் மாலைதீவுடன் இந்தியா உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.
இது இந்தியாவுக்கு திருப்தி தருவதாக இல்லாது போனாலும் இந்த நாடுகளுடான உடன்பாடு கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு உதவும் என்றும் நம்புகிறது.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ரீதியாக சீனா தனது வளங்களைக் கட்டியெழுப்பி வருகின்ற நிலையில் இலங்கையும் மாலைதீவும் இனிமேலும் அந்த நாட்டுடன் ஒட்டிக்கொள்ளக் கூடாது என்று இந்தியா நினைக்கிறது.
ஆனால் அரசியல் ரீதியாக இலங்கை அரசுடனும் மாலைதீவு அரசுடனும் இந்தியாவுக்கு உள்ள முரண்பாடுகளும் சீனாவின் செல்வாக்கு எதிர்பாராத துறைகளில் இங்கெல்லாம் விரிவடைந்து வருவதும் இந்தியாவின் இந்தக் கனவுக்குக் குறுக்கே நிற்கின்றன.
சுபத்ரா

தாய் பாசத்தைவிட வலிமையானது கள்ளக்காதல்..வவுனியாவில் பெற்ற குழந்தையை கிடங்கு வெட்டிப் புதைத்த தாய்

Written By Unknown on Saturday, July 13, 2013 | 6:15 PM

வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தானில் பிறந்து ஒரேநாளான பிள்ளையை கிடங்குவெட்டிப் புதைத்த தாய் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ,ஜெயக்கெனடி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்; அம்மிவைத்தானில் வசித்து வந்த பெண்ணொருவர் கணவன் வெளிநாட்டில்வாழ்ந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை குழந்தையொன்றைப் பிரசவித்து அதனை உடனேயே கிடங்கு வெட்டிப்புதைத்துள்ளார். இது குறித்து அயலவர்கள் பொலிஸாருக்கும் எனக்கும் அறிவித்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாய்க்கு 7வயது மகன்உள்ள நிலையில் தற்போது இத்தாய் தலை மறைவாகியுள்ளார். இந்நிலையில் பொலிஸார் குழந்தை புதைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தில் குழந்தையின் சடலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுள்ளனர் எனத் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் ஹர்த்தால்

Written By Unknown on Wednesday, July 10, 2013 | 4:40 PM

முல்லைத்தீவு நகரில் இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஈடுபடும் மீன்படி நடவடிக்கையை நிறுத்தக் கோரி மூன்று மீனவர்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றனது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக முல்லைத்தீவு நகரில் உள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, மீன்பிடி அமைச்சர் அல்லது அவரின் பிரதிநிதி அல்லது மாவட்ட செயலாளர் ஆகியோரில் ஒருவரினால் இது தொடர்பில் உறுதிமொழி வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன செய்யப்போகிறது இந்தியா?

தனக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை இந்தியா கேட்டுள்ளது. புதுடெல்லி சென்றிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடமும் இந்தியா இதையே தான் கூறியது. கொழும்பு வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் இதையே தான் இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளார்.
 
கடந்தமாதம் புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசியபோது, 13ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற்பட்ட அரசியல்தீர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை கொடுத்த வாக்குறுதி மீது சந்தேகத்தை எழுப்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
 
அதன் பின்னரும் இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனமாக்கும் முயற்சிகளில் இருந்து பின்வாங்காத நிலையில், தான் இந்தியா மீண்டும் மீண்டும் வாக்குறுதியை மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
 
இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதியை மதித்து நடக்கப் போவதில்லை என்பதையும், நிலைமை தனது கையை விட்டுப் போகத் தொடங்கி விட்டது என்பதையும், இந்தியா புரிந்து கொண்டு விட்டது என்பதையே, வாக்குறுதி தொடர்பான அதன் வலியுறுத்தல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
 
13ஆவது திருத்தச்சட்டம் இப்போது ஒரு பிராந்திய விவகாரமாக மாறுகின்ற சூழலை அவதானிக்க முடிகிறது. 13ஆவது திருத்தச்சட்டத்தை எப்படியாவது ஒழித்து விடவேண்டும் என்பதே, அரசதரப்பில் உள்ள, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட கடும் கோட்பாட்டாளர்களின் பிடிவாதமாக உள்ளது.
 
உடனடியாக இதனை ஒழித்து விடுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு தான் அரசாங்கம், எப்படியாவது இதனைப் பலவீனப்படுத்தியாக வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது.
 
ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கைப் பிரச்சினைக்கு, தான் முன்வைக்கும் தீர்வாகக் கருதுவதால், இந்தியாவுக்கு இது ஒரு பெரிய மானப் பிரச்சினையாக உள்ளது. இப்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை, இலங்கை ஒழித்தால் அல்லது பலவீனப்படுத்தினால், இந்தியாவுக்கு இரண்டு சிக்கல்கள் ஏற்படும்.
 
ஒன்று இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு இருந்த தார்மீகப் பொறுப்புகள் இல்லாமல் ஆக்கப்பட்டு விடும். அதனால், பிராந்திய ரீதியாக இந்தியாவின் ஆதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும். இரண்டாவது, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவிய இந்தியா, ஈழத் தமிழர்களின் நலன்களை முற்றிலுமாக உதாசீனப்படுத்தி, அவர்கள் மீது பழிதீர்த்துக் கொண்டு விட்டது என்ற கருத்து வலுப்படும்.
 
விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், இலங்கைத் தமிழர் விவகாரங்களில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இந்தநிலையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தி, தமிழர்களை எந்த அதிகாரமுமின்றி முடக்குவதற்கு இந்தியா துணை போகுமேயானால், இந்திய அரசின் மீது பெரும் பழிதான் சுமத்தப்படும். ஏனென்றால், போரின்போது, விடுதலைப் புலிகளை அழித்த பின்னர், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தது. அந்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றத் தவறிய நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் பலவீனப்படுத்துவதை, இந்தியாவினால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
 
பல்வேறு விடயங்களில் இலங்கை அரசுடன் இந்தியா விட்டுக் கொடுப்புடன்- சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்ட போதிலும், 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியாவினால் அவ்வாறு நடந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிராந்திய அல்லது பூகோள அரசியல் நலன்களை முன்னிறுத்தி - இந்தியா இந்த விடயத்தில் இலங்கையுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது.
 
ஏனென்றால், இந்த விடயத்தில் மன்மோகன்சிங் அரசாங்கம் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டால், அது காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த மிகப்பெரிய அநீதியாகவே பார்க்கப்படும். அதுவும், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தகையதொரு சமரச முடிவு எடுக்கப்படுமானால், அது மிகப்பெரிய அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகதாகவே கருதப்படும்.
 
அதைவிட, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு இந்தியா முன்வைக்கும் உயர்ந்தபட்சத் தீர்வாக 13ஆவது திருத்தச்சட்டமே உள்ள நிலையில், அதை இலங்கை அரசு நிராகரிக்கும்போது இந்தியாவின் மீது இயல்பாகவே ஓர் அழுத்தம் ஏற்படும்.
 
அதாவது தமிழர் பிரச்சினைக்கான மாற்றுத் தீர்வு என்ன என்பதை, வெளிப்படுத்த வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும். அத்தகைய நெருக்கடி, இந்தியாவை 1987இற்கு முந்திய நிலைக்குக் கொண்டு செல்லும்.
 
எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதே, இந்தியாவுக்கு இன்று மிகவும் வசதியானது.
 
எனவே, இந்தியா திரும்பத் திரும்ப வாக்குறுதிகளை நினைவுபடுத்தியும், 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தக் கூடாது என்று எச்சரித்தும் தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுகிறது. ஆனால், இந்தியாவினது இந்த நினைவூட்டல்களையோ, 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தப்படுவது தொடர்பான அதன் கவலைகளைப் பற்றியோ, இலங்கை அதிகம் கரிசனை கொண்டதாகவே தெரியவில்லை.
 
அவ்வாறு இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால், 13ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான எந்த நகர்வையும் அது மேற்கொள்வதைத் தவிர்த்திருக்கும். குறிப்பாக, தெரிவுக்குழு தொடர்பான நகர்வுகள் குறைந்தபட்சம் சில நாட்களுக்கேனும் பிற்போடப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
 
சிவ்சங்கர் மேனன், இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டிய சில மணிநேரங்களிலேயே தெரிவுக்குழுக் கூட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. அதற்கும் அப்பால், தெரிவுக்குழுவுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு வருவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிவ்சங்கர் மேனனிடம் முன்வைத்திருந்தார்.
 
இதிலிருந்து இந்தியாவுக்கு தனது நிலை என்ன என்பதும், இலங்கை அரசின் நிலை என்ன என்பதும் நன்றாகவே விளங்கி கொண்டிருக்கும். அதாவது, இந்தியா வரைந்துள்ள கோட்டுக்குள் இலங்கை இனிமேலும் நிற்கப்போவதில்லை என்பது இந்தியாவுக்கு விளங்காமல் போயிருக்காது.
 
இந்தநிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பாதுகாக்க, இந்தியா என்ன செய்யப் போகிறது? எத்தகைய வழிமுறையைக் கையாளப் போகிறது? என்பன அரசியல் அரங்கில் மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாக எழுந்திருக்கிறது.
-கே.சஞ்சயன்
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger