R News: தேசிய​ அரசியல்
Headlines News :
Powered by Blogger.

Latest Post

Showing posts with label தேசிய​ அரசியல். Show all posts
Showing posts with label தேசிய​ அரசியல். Show all posts

அம்மா கண்ணீர் விட்டு அழுதார்

Written By Unknown on Sunday, January 20, 2013 | 6:36 PM

காங்கிரஸ் கட்சியும் நாட்டு மக்களும்தான் இனி தமது வாழ்க்கை என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ராகுல்காந்தி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: எனக்கு ஆதரவு தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி என்பது எனக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய கெளவரம். கடந்த 8 ஆண்டுகாலத்தில் கட்சி எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. 

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது ஆயுதங்களால் அல்ல... மக்களின் ஆயுதமற்ற அகிம்சைவழிப் போராட்டத்தால்தான்! காங்கிரஸ் கட்சியும் அகிம்சை போராட்டத்தின் மூலமாக பிரிட்டிஷாரை வீட்டுக்கு அனுப்புவோம் என்று முழக்கமிட்டது. மகாத்மா காந்திக்குப் பின் ஜனநாயகத்தை அரசியல் சாசனத்தின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மதங்களுக்கு அப்பால்..சாதிகளுக்கு அப்பால் காங்கிரசை ஆதரிக்கின்றனர். விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக பசுமைப் புரட்சி வந்தது. 

அதேபோல் மக்களது வாழ்வில் விடியலைத் தர தகவல் தொழில்நுட்ப புரட்சி வந்தது. மக்கள் தங்களுக்கான உரிமைகளை அனுபவித்து வருகின்றனர். ஏழை மக்களின் நலன்களைப் பற்றி கதவை மூடிய அறைகளுக்குள் நாம் விவாதிக்கிறோம். மக்களுக்கான நலத்திட்டங்கள் மக்களிடம் சேரவேண்டும் என்பதுதான் மானியங்களை நேரடியாக வழங்குவது போன்றவை. ஆனால் எதிர்க்கட்சிகளோ மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறுகின்றனர். 

காங்கிரஸ் கட்சியில் எனக்கு மிகப் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஒரு கட்சி அல்ல.. ஒரு குடும்பம். உலகின் மிகப் பெரிய குடும்பம் காங்கிரஸ் கட்சி. நமது குடும்பத்தால் மாற்றங்களை உருவாக்கிவிட முடியும். உங்கள் அனைவரது கருத்துகளையும் மதித்து நடப்பேன். இந்த கட்சி மகாத்மா காந்தியினுடையது. 

நேற்று இரவு எனக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். என்னுடைய அறைக்கு அம்மா வந்தார். ஆனால் அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்குத் தெரியும்.. அதிகாரம் என்பது எப்படிப்பட்டது என்பதை அவர் உணர்ந்தவர். அதனால்தான் அவர் அதிகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இருந்தார்.

இன்று முதல் காங்கிரஸ் கட்சி, இந்திய மக்கள்தான் என்னுடைய வாழ்க்கை. நமது கட்சியில் தேர்தலில் போட்டியிடுவோர் குறித்து வட்டார் அளவில் கட்சித் தொண்டர்களிடம் நாம் விவாதிப்பது இல்லை. பிற கட்சிகளில் இருந்து நம்மோடு இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோற்ற பின் மீண்டும் பழைய கட்சிக்கே போய்விடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும்

. காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் மதிப்புக்குரிய சொத்து என்பதை கட்சி கவனத்தில் கொண்டு செயல்படும் என்றார் அவர்

கல்யாண வீட்டுக் குதிரை மாதிரி ராகுல் காந்தி, அசைய மாட்டேங்குறாரே... பாஜக கிண்டல்

Written By Unknown on Monday, November 12, 2012 | 11:30 AM

Photoகல்யாண வீட்டில் மாப்பிள்ளை அழைப்புக்குப் பயன்படுத்தப்படும் குதிரை மாதிரிதான் ராகுல் காந்தி என்று கிண்டலடித்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா.
இப்போதெல்லாம் அரசியல் செய்வது ரொம்ப ஈஸியாகி விட்டது. நீ அவரைப் போல இருக்கிறாய், அவர் உன்னை மாதிரி இருக்கிறார் என்று படு ஜாலியாக பேசப் பழகி வருகின்றனர் இந்திய அரசியல்வாதிகள்.
மோடியை காங்கிரஸ்காரர்கள் குரங்கு என்று பேசுகின்றனர். காங்கிரஸ்காரர்கள், அரவிந்த் கெஜ்ரிவாலை ராக்கி சாவந்த்துடன் இணைத்துப் பேசுகின்றனர். இப்படி மாறி மாறி பேசிப் பழகி வருகிறார்கள் இந்திய அரசியல்வாதிகள்.
இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியை, கல்யாண வீட்டுக்குதிரை என்று பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இதுகுறித்து அவர் கூறுகையில், மாப்பிள்ளை அழைப்பின்போது மாப்பிள்ளைய கூட்டி வருவதற்குப் பயன்படுத்தப்படும் குதிரை போல இருக்கிறார் ராகுல் காந்தி.
இந்தக் குதிரை எப்போதும் ஒரே இடத்தில்தான் நிற்கும், அசையவே அசையாது. அதேபோலத்தான் ராகுல் காந்தியும் எங்குமே நகருவதில்லை. அவரை நகர்த்த எத்தனையோ முயற்சிகளைச் செய்து பார்த்தாகி விட்டது. ஆனாலும் அவர் நகர மாட்டேன் என்கிறார். சிலர் அவரைத் தள்ளி விடக் கூட முயற்சிக்கின்றனர், ஆனாலும் முடியவில்லை.
தனக்கான நேரம் வரும் என்று அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அதுவரை மன்மோகன் சிங் என்ன செய்யப் போகிறாரோ பாவம் என்று கூறியுள்ளார் சின்ஹா.
சின்ஹாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திக்விஜய் சிங் பேசுகையில், முதலில் கத்காரி பாஜகவின் தலைவரா இல்லையா என்பது குறித்து சின்ஹா விளக்க வேண்டும். அவரை தலைவராக அவர் ஏற்கிறாரா இல்லையா என்பதைச் சொல்ல வேண்டும் என்றார்.

நரேந்திர மோடிக்கு மனைவி இருக்காங்க தெரியுமா?: திக்விஜய்சிங் பரபரப்புப் பேச்சு

Written By Unknown on Saturday, November 3, 2012 | 11:20 AM

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியை கிண்டலடித்து சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கும் நரேந்திர மோடியின் பேச்சு இப்பொழுது அவருக்கே பூமராங்காக திரும்பியிருக்கிறது.
 Digvijaya Singh Asks Narendra Modi மோடியின் கிண்டல்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையில் மீண்டும் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு "ரூ. 50 கோடி காதலி" இருக்கிறார். இவ்வளவு வேல்யூவான காதலி உண்டா? எனக் கேள்வி எழுப்பினார்.
ஐ.பி.எல். விவகாரத்தில் சசிதரூரின் காதலியாக இருந்த சுனந்தாவை மனதில் வைத்துக் கொண்டுதான் மோடி இப்படிப் பேசியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சசி தரூரோ, என் மனைவி விலை மதிப்பற்றவர் எனப் பதிலடி கொடுத்திருந்தார்.
இப்போது மோடியை இதே மனைவி விவகாரத்தை வைத்து மடக்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங்.
சிம்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திக்விஜய்சிங், பொதுமக்களே! நீங்கள் இணைய தளத்தில் யூ டியூப் பகுதிக்கு சென்று நரேந்திர மோடியின் மனைவி என்று டைப் செய்தால் யசோதா பெண் என்ற பெயர் வரும்.
நரேந்திர மோடியுடன் தமக்கு 1968- ல் திருமணம் நடைபெற்றதாக குறிப்பிட்டு உள்ளார். ஆனால், மோடி இதற்கு பதில் அளிக்க மறுக்கிறார்.
தேர்தல் ஆணையத்திடம் மோடி அளித்துள்ள உறுதிமொழி பத்திரத்தில், திருமணம் ஆனவரா? என்ற பகுதியில் எதுவும் குறிப்பிடாமல், வெற்றிடமாக விட்டது ஏன்? மோடி, உங்கள் மனைவி எங்கே இருக்கிறார்? ஏன் அவரை மறைத்து வைத்துள்ளீர்கள். உங்களுக்குத் திருமணமாகி விட்டதா, மனைவியை விவாகரத்து செய்து விட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடிக்கு மனைவி இருப்பதாக திக்விஜய் சிங் கூறியிருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பாஜகவிலிருந்து வெளியேறிய எதியூரப்பா புதிய கட்சியை கடன் வாங்குகிறார்

Written By Unknown on Thursday, October 25, 2012 | 2:22 PM

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கும் கர்நாடகா முன்னாள் முதல்வர் எதியூரப்பா டிசம்பர் மாதம் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் கர்நாடகா ஜனதா கட்சியை தமது கட்சியாக்குவதற்கான நடவடிக்கைகளை எதியூரப்பா மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
 From Bjp Kjp On Nov 9 தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றியது கர்நாடகத்தில்தான்! இதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் எதியூரப்பா! ஆனால் சுரங்க முறைகேடு புகாரில் சிறைக்குப் போன பிறகு எதியூரப்பாவுக்கு எல்லாமே இறங்குமுகமாகிவிட்டது! பாஜக மேலிடம் இவரை கைவிட்டுவிட எத்தனையோ முறை முயற்சித்தும் முதல்வர் பதவி மீண்டும் கிடைக்கவில்லை! விரக்தியடைந்து போன எதியூரப்பா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த கையோடு டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குவேன் என்றும் கூறினார்.
கர்நாடக ஜனதா தளம்
இந்நிலையில் பத்மநாபா பிரசன்ன குமார் என்பவரால் பதிவு செய்யப்பட்டிருக்கும் ‘கர்நாடகா ஜனதா கட்சி'யை பேரம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகா ஜனதா கட்சியின் முக்கிய கூட்டம் வரும் நவம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. எதியூரப்பாவின் அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அவரையே தலைவராக ‘ஒருமனதாக' தேர்வு செய்ய இருக்கின்றனர்.
சைக்கிள் சின்னம்
பிரசன்னகுமாரை தம் பக்கம் வளைத்திருக்கும் எதியூரப்பா, தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார். இத்துடன் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனராம். கர்நாடகா ஜனதா கட்சிய் பதிவு செய்து வைத்த பிரசன்னகுமார் இப்போது டெல்லியில் செம பிசியாம்!

பாரதீய ஜனதாவில் இருந்து வசுந்தரா ராஜே விலகி தனிக்கட்சி தொடங்க முடிவு

Written By Unknown on Saturday, October 20, 2012 | 7:45 AM


ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த பாரதீய ஜனதா ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்தவர் வசுந்தரா ராஜே. சிந்தியா அரச குடும்பத்தை சேர்ந்த இவர் ராஜஸ்தானில் செல்வாக்கு மிக்க பா.ஜ.க தலைவராக உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. இதனால் வசுந்தரா ராஜே எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பா. ஜ. க தலைவர்கள் தீவிரமாகியுள்ள நிலையில் பா. ஜ. க மூத்த தலைவர்கள் மீது வசுந்தரா ராஜே அதிருப்தி அடைந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில பா. ஐ.க தலைவர் பதவியை வசுந்தரா நீண்ட நாட்களாக கேட்டு வருகிறார். மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு தன் முடிவுப்படியே சீட் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வசுந்தராவின் இந்த கோரிக்கைகளை இதுவரை பா. ஜ. க தலைவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து எடியூரப்பா பாணியில் மாற வசுந்தரா ராஜே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ராஜஸ்தான் பா.ஜ.க.வில் வசுந்தராவுக்கு இன்று தனி ஆதரவாளர்கள் உள்ளனர். கட்சியும் அவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே தன் ஆதரவாளர்க ளுடன் பா. ஜ.கவில் இருந்து விலகுவது பற்றி வசுந்தரா ஆலோசனை நடத்தி வருகிறார்.
ராஜஸ்தான் மாநில அரசியலில் தனக்கு எதிரியாக உள்ள கடாரியாவை பா. ஜ. க மேலிட தலைவர்கள் ஊக்குவிப் பது பற்றியும் வசுந்தரா தன் ஆதரவாளர் களிடம் கருத்து கேட்டறிந்தார். மேலிடத்துக்கு காலக்கெடு விதிக்க வசுந்தரா திட்டமிட் டுள்ளார். அதற்குள் மேலிட தலைவர்கள் தன் கோரிக்கையை ஏற்காவிட்டால், வசுந்தரா பா. ஜ. கவில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு உடனடியாக தனிக்கட்சி தொடங்கவும் அவர் முடிவு செய்துள்ளார். வசுந்தரா விலகினால், ராஜஸ்தான் மாநிலத்தில் பா. ஜ. க வுக்கு பலத்த அடி விழும் என்று கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் கல்யாணசிங் விலகிய பிறகு அந்த மாநிலத்தில் பா. ஜ. க இன்னமும் தலையெடுக்க முடியாமல் உள்ளது. அது போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் மராண்டியை புறக்கணித்ததால் அந்த மாநிலத்திலும் பா. ஜ. க. வலு இழந்துள்ளது. அந்த வரிசையில் கர்நாடகாவும் இடம் பிடிக்க உள்ள நிலையில் ராஜஸ்தானிலும் பிரச்சினை ஏற்பட்டிருப்பது பா. ஜ. க மூத்த தலைவர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

எனது குரு சங்கர் தேவ் காணாமல் போனது பற்றி சி.பி.ஐ. விசாரணையை சந்திக்கத் தயார்: ராம்தேவ் பேட்டி

Written By Unknown on Saturday, October 13, 2012 | 6:47 PM


திவ்ய யோக மந்திர் டிரஸ்டின் நிறுவனரும், யோகா குரு ராம்தேவின் குருவும் ஆன சுவாமி சங்கர் தேவ் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி காணாமல் போனார்.
 
ஹரித்துவாரில் உள்ள ஆசிரமத்தில் இருந்து காலையில் வாக்கிங் சென்றவர் அதன்பின்னர் திரும்பி வரவில்லை. அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.
எனது குரு சங்கர் தேவ் காணாமல் போனது பற்றி சி.பி.ஐ. விசாரணையை சந்திக்கத் தயார்: ராம்தேவ் பேட்டி 
இதுபற்றி ராம்தேவின் உதவியாளரான பாலகிருஷ்ணா கொடுத்த புகாரின்பேரில் கன்கால் போலீஸ்  நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி காவல்துறை தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்து, வழக்கை முடித்தது.
 
இதற்கிடையே, யோகா குரு சுவாமி சங்கர் தேவ் காணாமல் போன விவகாரத்தில் ஏதோ தவறு நடந்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கடந்த மாதம் பகீர் தகவலை வெளியிட்டார். இதனை ராம்தேவ் மறுத்தார்.
 
இந்நிலையில், சுவாமி சங்கர் தேவ் காணாமல் போனது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டது. இதனை ராம்தேவ் வரவேற்றுள்ளார்.
 
இதுபற்றி ராம்தேவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். எந்த விசாரணைக்கும் நான் பயப்படமாட்டேன். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் சி.பி.ஐ. அல்லது  உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கடந்த ஆண்டு கடிதம் கொடுத்தேன்.
 
எனவே, இந்த வழக்கில் சி.பி.ஐ. நியாயமான முறையில் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைக் கண்டித்து குஜராத்தில் வரும் 30-ம் தேதி முதல் யாத்திரை நடத்தப்போவதாகவும் ராம்தேவ் கூறினார்.

பாரதீய ஜனதாவை விட்டு விலகும் முடிவில் மாற்றம் இல்லை - எடியூரப்பா


பாரதீய ஜனதா தலைமையின் மீது வெறுப்படைந்த, முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அக்கட்சியிலிருந்து விலகி புதியக் கட்சியை தொடங்கவுள்ளார்.
 
இந்நிலையில் ஆதரவாளர்கள், விலகும் அவரது முடிவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதாக வந்த செய்திகளை எடியூரப்பா கடுமையாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பாரதீய ஜனதாவை விட்டு விலகும் முடிவில் மாற்றம் இல்லை - எடியூரப்பா 
வரும் டிசம்பர் மாதம் வரை அவர்களை காத்திருக்கவிடுங்கள். பாரதீய ஜனதாவிலேயே தொடர்ந்து இருப்பேன் என்ற  பேச்சுக்கே இடமில்லை. பாரதீய ஜனதாவை விட்டு விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மந்திரி சபையில் இருக்கும் எனது ஆதரவாளர்களுக்கு அங்கு தொந்தரவு கொடுக்கப்பட்டால், ஆட்சி நிலைக்காது என்று நான் எச்சரிக்கிறேன்.
 
வரும் டிசம்பர் மாதம் கட்சியிலிருந்து விலகும் எனது செய்தியை தலைமைக்கு தெரியப்படுத்துவேன். டிசம்பர் மாதம் எனது எம்.எல்.ஏ பதவியை துறந்து நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
அடுத்த வருடம் கர்நாடகாவில், தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியின் மாவட்டத் தலைவர்களை அழைத்து எடியூரப்பா பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் "மல்யுத்தம்" நடத்தும் கர்நாடகம்

Written By Unknown on Thursday, October 11, 2012 | 11:38 AM

தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினை இரு புறமும் உள்ள மக்களை ஏகத்திற்கும் பதற்றத்தில் மூழ்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெறும் போராட்டங்கள், பந்த் எல்லாமே அங்குள்ள தமிழர்களை அச்சத்தில் வாழ வைத்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்க, கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷட்டரோ, "காவிரியில் தண்ணீர் திறந்து விட பிரதமர் மன்மோகன்சிங் போட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று காவிரி நதி நீர் ஆணையம், உச்ச நீதிமன்றம் என்று வேகமாக நடையைக் கட்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அவரே, "தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதும், தமிழகத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. "தமிழக மத்திய அமைச்சர்கள் (திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்) ஏன் இதனை கண்டிக்காமல் இருக்கிறார்கள்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், "தன் சொந்த மாநிலத்திற்கு ஆதரவாகப் பேசிய கிருஷ்ணா மத்திய அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். ஆகவே அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்று டொக்டர் ராமதாஸும் கோரிக்கை வைத்துள்ளனர், கண்டித்துள்ளனர். ஆனால் தி.மு.க.வோ, ஆளும் அ.தி.மு.க.வோ இதுபற்றி கருத்துக் கூறாமல் அமைதி காக்கின்றன.

இந்நிலையில் காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினையில் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியதால், கர்நாடக மாநில அரசு மேட்டூர் அணைக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டது. பிறகு திடீரென்று அதை 5000 கன அடியாக குறைத்தது. இதற்கிடையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாஹர் அணையை கர்நாட விவசாயிகள் முற்றுகையிட்டார்கள். "பிரதமருக்கு நல்ல புத்தி வழங்கு" என்று தங்கள் மாநிலத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் முன்பு வித்தியாசமாக வழிபட்டார்கள். இந்நிலையில் இன்னும் அதை உஷ்ணப்படுத்தும் விதமாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா போன்றவர்களும் களத்தில் குதித்தார்கள். அதிலும் குறிப்பாக சதானந்த கவுடா, "உச்சநீதிமன்ற தீர்ப்பு நம் மாநிலத்திற்கு விரோதமாக வருமேயானால் இங்குள்ள அமைச்சர்கள், முதலமைச்சர் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றே கொந்தளித்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா - பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து காவிரி பிரச்சினை பற்றி பேசிவிட்டு வந்தார். "பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம்" என்பது கர்நாடகாவின் வாதம். ஆனால் "பேசிப் பார்த்து விட்டோம். நீங்கள் கேட்கவில்லை. அதனால் கோர்ட் மூலமே தீர்த்துக் கொள்வோம்" என்பது தமிழகத்தின் வாதம். இப்படி இரு மாநிலங்களுக்கும் இடையேயான காவிரி நீர் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழக காவிரி டெல்டா மாவட்டங்கள், குறிப்பாக தமிழகத்தின் "நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. மத்திய அரசிலிருந்து ஒரு குழு இரு மாநிலங்களுக்கும் சென்று விசாரித்துவிட்டுச் சென்றிருக்கிறது. கர்நாடகாவின் அணைகளில் தண்ணீர் ததும்புவதையும், தமிழக அணைகளில் தண்ணீரின் கொள்ளளவு குறைந்து சுருங்கிக் கிடப்பதையும் பார்த்து விட்டுத் திரும்பிச் சென்றிருக்கிறது.

மெட்ராஸ் ஸ்டேட்- மைசூர் ஸ்டேட்!
இவ்வளவு "சூடான" காவிரி பிரச்சினை எப்படி ஆறு போலவே நீண்டு கொண்டிருக்கிறது. காவிரி நீர் கர்நாடக மாநிலம் குடகு மலையில்தான் உருவாகிறது. ஆனால் அது பாய்ந்து ஓடும் பகுதிகள் பெரும்பாலானவை தமிழகத்திற்குள் உள்ளன. அப்போது இருந்த "மெட்ராஸ் ஸ்டேட்டிற்கும், மைசூர் ஸ்டேட்டிற்கும்" இடையே முதலில் இந்த காவிரி நதிநீர் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டது. அதை 1892ஆம் வருட ஒப்பந்தம் என்று அழைக்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் மெட்ராஸ் ஸ்டேட்டின் (தமிழகம்) அனுமதியின்றி பாசன வசதிகளை பெருக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான். அதாவது விவசாய நிலங்களை தமிழகத்தின் அனுமதியில்லாமல் அதிகரித்துக் கொள்ளாதீர்கள் என்பதுதான் முக்கிய ஷரத்து. ஆனால் இதில் பிரச்சினையை முதலில் கிளப்பியது மைசூர் ஸ்டேட்தான். முதன் முதலில் எங்கள் மாநிலத்திற்குள் கிருஷ்ணசாஹர் அணையைக் கட்டுவோம் என்று அடம்பிடித்து "காவிரி சர்ச்சையை" முதலில் தொடக்கி வைத்தது மைசூர் அரசுதான். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இங்கிலாந்தில் காணப்பட்டது. அந்நாட்டில் உள்ள "மினிஸ்ட்ரி ஒஃப் இந்தியன் எபையர்ஸ்" என்ற துறையின் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது இரு மாநிலத்திற்கும் பலனளிக்கும் விதத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுதான் கிருஷ்ண சாஹர் அணையை மைசூர் ஸ்டேட் (கர்நாடகா) கட்டிக் கொள்ளும். அதற்கு இணையாக மேட்டூர் அணையை மெட்ராஸ் மாநிலம் கட்டிக் கொள்ளும் என்ற தீர்ப்பு. அப்படித்தான் 1924ஆம் வருட காவிரி ஒப்பந்தம் உருவானது. இதன் படி மைசூர் ஸ்டேட் புதிதாக 1.10 லட்சம் ஏக்கர் நிலம் வரை பாசன வசதிகளை பெருக்கிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

1924 ஒப்பந்தமும் நடுவர் மன்ற கோரிக்கையும்!
1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், 1959 வாக்கில் கர்நாடக மாநிலம் சர்ச்சைக் கொடியை தூக்கிப் பிடித்தது. "காவிரி நதிநீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது. குறிப்பாக "கிருஷ்ணராஜ சாஹர் அணையைத் தொடர்ந்து ஹேமாவதி, கபினி அணைகள் கட்ட வேண்டும், 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம். அது எங்களை கட்டுப்படுத்தாது" என்பது கர்நாடக மாநிலத்தின் வாதம். அடுத்த சுற்றுத் தகராறுக்கான அஸ்திவாரம் போடப்பட்டது. இதைத் தீர்க்க அப்போதே ஐந்து முறை இரு மாநிலங்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த தீர்வும் கிட்டவில்லை. சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கர்நாடகாவின் வாதம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏன் தஞ்சை விவசாயிகள் தங்கள் வயிற்றில் அடிக்க கர்நாடக மாநிலம் முயற்சி செய்கிறதே என்று கோபத்தின் உச்சிக்கே போனார்கள். அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, தஞ்சாவூர் காரர். ஆகவே விவசாயிகளின் உணர்வுகளை எதிரொலித்த அவர் 1971இல் ஒரு முக்கிய கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்தார். அதுதான் காவிரி நதி நீர் பங்கீடு பற்றி தீர்ப்பு வழங்க ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை. இரு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பங்கீடு பற்றி பிரச்சினை எழுந்தால், அதைத் தீர்த்து வைக்க இது மாதிரி நடுவர் மன்றங்களை அமைக்கும் அதிகாரம் இந்திய அரசியல் சட்டப்படியே மத்திய அரசுக்கு இருக்கிறது.

வந்தது காவிரி நடுவர் மன்றம்!
தமிழகத்தின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டிற்கு போனார்கள். "எங்களுக்கு நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிடுங்கள்" என்று கோரிக்கை வைத்தார்கள். இதுபோன்ற காலகட்டத்தில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, "இன்னொரு முறை இரு மாநில முதல்வர்களும் இப்பிரச்சினை குறித்து பேசிப் பாருங்கள்" என்று ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனையை அன்று இந்திரா காங்கிரஸுடன் கூட்டணியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கேட்டார். அதனால் சுப்ரீம் கோர்ட்டில் நடுவர் மன்றம் கோரி போட்ட வழக்கை வாபஸ் வாங்க தமிழக முதல்வராக இருந்த அவர் உத்தரவிட்டார். அதன்படி அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதற்குள் மூன்று வருடங்கள் உருண்டோடின. 1974ஆம் வருடமும் வந்தது. இப்போது கர்நாடக மாநிலம் வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது. இந்தமுறை "காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1924இல் போடப்பட்டது. 50 வருடம் முடிந்து விட்டது. ஆகவே அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது" என்று புதுக் கரடி விட்டது. அந்த ஒப்பந்தம் மூலம் காவிரி நீரை தமிழகத்துடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்தது. இச்சிக்கலைத் தீர்க்க "உண்மை கண்டறியும் குழு" அமைக்கப்பட்டது. இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். இப்பிரச்சினையைத் தீர்க்க "காவிரி ரிவர் வோட்டர் ஒத்தோரிட்டி" ஒன்றை அமைக்கலாம் என்றெல்லாம் அக்கூட்டங்களில் ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் உருப்படியான தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. இப்படியொரு சூழ்நிலையில், 1990 வாக்கில் முதல்வர்களின் பேச்சில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி வி.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்த போது 1990இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 

இடைக்காலத் தீர்ப்பும் தமிழகத்திற்கு எதிரான கலரவமும்!
நடுவர் மன்றத்தின் முன்பு தமிழகம் தண்ணீர் கேட்டு நின்றது. அதற்கு வந்த தலைவர்கள் அடிக்கடி மாறினார்கள் என்பது வேறு கதை. ஆனால் நடுவர் மன்றமோ, "இடைக்கால தீர்ப்பு வழங்க எங்களுக்கு அதிகாரமில்லை" என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற எண்ணிய தமிழகம் மீண்டும் இந்திய உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியது. "இடைக்கால தீர்ப்பு வழங்க அதிகாரம் இருக்கிறது" என்று உச்சநீதிமன்றம் சொல்ல, தமிழகத்திற்கு இறுதி தீர்ப்பு வரும் வரை 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாட மாநிலத்திற்கு உத்தரவிட்டது. வருடம் முழுவதும் எந்தெந்த மாதங்களில் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் வரையறுத்தது. இந்திய நதிநீர் பிரச்சினைகள் வரலாற்றில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றங்களில், இடைக்கால தீர்ப்பு வழங்கிய ஒரே நடுவர் மன்றம் காவிரிக்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் மட்டுமே என்றால் மிகையாகாது. அப்போது இன்னொரு உத்தரவையும் நடுவர் மன்றம் கர்நாடக மாநிலத்திற்கு போட்டது. "இப்போது உங்கள் வசம் இருக்கின்ற 11.2 லட்சம் நீர்பாசன நிலங்களுக்கு மேல் விஸ்தரிக்கக் கூடாது" என்பதுதான் அந்த உத்தரவு. இந்த உத்தரவுகளையும் ஏற்க மறுத்து கர்நாடக மாநிலம் வம்பு பண்ண, இறுதியில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படியே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. பிறகு இடைக்கால தீர்ப்பை அரசிதழில் (கெஜட் நோட்டிபிகேஷன்) வெளியிடக்கூடாது என்று இந்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது கர்நாடக மாநிலம். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இதற்காக நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அதன்பிறகு காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. பங்காரப்பா கர்நாடக முதல்வராக இருந்த நேரத்தில் இதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு எதிராக பெரும்கலவரம் வெடித்தது.

காவிரி நதி நீர் ஆணையமும் வரைவு திட்டமும்!
ஆனால் இயற்கைத்தாய் தமிழகத்தின் பக்கம் நின்றாள். 1991 முதல் 1994 வரை காவிரி நதி பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால், தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீல் தட்டுப்பாடு வரவில்லை. நடுவர் மன்றம் அளித்த 205 டி.எம்.சி.க்கும் மேலாகவே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்தது. 1994இல் ஏறக்குறைய 394 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி மூலம் கிடைத்தது. 1995இல் மழை பொய்க்கவே நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பும் பொய்த்துப் போகுமோ என்ற அச்சம் தமிழகத்திற்கு ஏற்பட்டது. இதனால் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு கச்சிதமாக நிறைவேற்ற ஒரு தனி ஆணையம் வேண்டும் என்று உணரப்பட்டது. இந்திய பிரதமராக ஐ.கே.குஜ்ரால் இருந்த போது இதன் அடிப்படையில்தான் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தலைவராக இருப்பவர் பிரதமர். காவிரி நதி நீரில் பங்கு பெறும் கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்களும் உறுப்பினர்கள். இந்த ஆணையம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்காக "குஜ்ரால் வரைவு திட்டம்" ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எந்த மாநிலமாவது காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை மதிக்கத் தவறினால், அந்த மாநிலத்தின் அணைக்கட்டுகளை அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக காவிரி நதி நீர் ஆணையம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு அதிகாரமிக்க ஷரத்து இருந்தது. ஆனால் மாநிலத்திற்குள் உள்ள அணையை மத்திய அரசு எடுத்துக் கொள்வதா என்று கேள்வி எழுப்பப்பட்டு, இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்ற குரல் கிளம்பியது. அதனால் அந்த ஷரத்தை நீக்கி விட்டு, இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்த போது காவிரி நதி நீர் ஆணையத்தின் "வரைவுத் திட்டம்" வெளியிடப்பட்டது. காவிரி நதி நீர் ஆணையம் "பல் இல்லாத ஆணையமாக" உருவானது இப்படித்தான்!

மன்னிப்புக் கேட்ட எஸ்.எம்.கிருஷ்ணா!
புதிதாக அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையத்தின் முதல் கூட்டம் 28.10.1998இல் பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழக முதல்வராக கருணாநிதியும், கர்நாடக முதல்வராக ஜே.எச்.பாட்டீலும் பங்கேற்றார்கள். அங்கு வித்தியாசமான பிரச்சினை எழுந்தது. தமிழகத்திற்கு தண்ணீர் எவ்வளவு திறந்து விடப்படுகிறது என்பதை மேட்டூர் அணை பாயின்டில் அளப்பதா அல்லது பில்லிக்குண்டுவில் அளப்பதா என்ற சர்ச்சை உருவானது. தமிழகம் மேட்டூரில்தான் இருக்க வேண்டும் என்றது. கர்நாடகமோ பில்லிக்குண்டுவில்தான் இருக்க வேண்டும் என்றது. இரு மாநிலமும் இப்படி முஷ்டியை முறுக்கிக் கொண்டது. பிறகு வறட்சி காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற கேள்வியும் எழுந்தது. இப்படியே கேள்வி எழுப்பியே காவிரி நதி நீர் ஆணையத்தை கொச்சைப்படித்தியது கர்நாடக அரசு. கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும் காவிரி நதிநீர் பங்கீட்டை எந்த நிலையிலும் மதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள். இந்நிலையில் 2002 வாக்கில் வெறும் எட்டாயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட மறுத்து கர்நாடக அரசு முரண்டு பிடித்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு போனவுடன், "கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்" என்று கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க, அப்போது கர்நாடக மாநில முதல்வராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா (தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்) இந்திய உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார். கோர்ட் உத்தரவுப்படி 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டார்.

காவிரி நதி நீர் இறுதி தீர்ப்பு!
இப்படி தமிழகம், கர்நாடக மாநிலத்துடன் நடத்திய போராட்டங்கள் கணக்கிலடங்காது. இது மாதிரி சூழ்நிலையில்தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ஆம் வருடம் பெப்ரவரி 5ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறிப்பாக பிளானிங் கமிஷன் கூட்டத்திற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி டெல்லி சென்றிருந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 577 சிட்டிங்குள், ஏழு வருடங்கள் சாட்சிகள் விசாரணை நடந்தது. ஸ்டார் சாட்சிகளாக பிரபல விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோர் எல்லாம் இந்த நடுவர் மன்றத்தின் முன்பு சாட்சி அளித்தவர்கள். இந்த தீர்ப்பில் தமிழகத்தின் பல்வேறு வாதங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. காவிரி நதி நீர் பங்கீட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் போர்வெல் போட்டு எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் காவிரி நதிநீர் பங்கீட்டில் சேர்த்து கணக்கிட வேண்டும் என்று கர்நாடக அரசு வைத்த கோரிக்கையை நிராகரித்தது நடுவர் மன்றம். "நாங்கள் கொடுக்கும் தண்ணீரில் 200 டி.எம்.சி.யை (வெள்ள காலங்களில்) தமிழகம் கடலில் கலக்க விட்டு விடுகிறது. அதை அணை கட்டி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டியதுதானே" என்று ஒரு கருத்தைச் சொன்னது கர்நாடகம். அந்த கோரிக்கையையும் நடுவர் மன்றம் நிராகரித்தது. 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்று ஒரு சொத்தை வாதத்தை தூக்கிப் பிடித்தது கர்நாடக மாநிலம். அதையும் நிராகரித்த காவிரி நடுவர் மன்றம், "1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்களின் அடிப்படையில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து 50 வருடங்கள் கழித்து இந்த ஒப்பந்தத்தை ரிவியூவ் பண்ணிக் கொள்ளலாம் என்றுதான் ஒப்பந்தம் கூறுகிறதே தவிர, அந்த ஒப்பந்தம் 50 வருடம் கழித்து காலாவதியாகிவிடும் என்று கூறவில்லை. ஆகவே அந்த சட்டங்களின் படி "ரிவியூவ்" பண்ணியே இப்போது இறுதி தீர்ப்பு வழங்குகிறோம்" என்று கூறியது நடுவர் மன்றம். கடைசியாக, "சரி, தண்ணீர் கொடுக்கிறோம். அதாவது நவம்பர், டிசெம்பர் மாதங்களில் கொடுக்கிறோம்" என்று நடுவர் மன்றத்திடம் கூறியது கர்நாடகம். அதாவது கர்நாடகத்தில் கிடைக்கும் சர்ப்ளஸ் தண்ணீரைக் கொடுக்கிறோம் என்பது இதன் பொருள். ஆனால் நடுவர் மன்றமோ, "தமிழகத்திற்கு ஜூன் முதல் செப்டெம்பர் வரைதான் சாகுபடிக்கு நீர் தேவை. அதனால் இந்த மாதங்களில் தமிழகத்திற்கு 134 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று இறுதித் தீர்ப்பில் கூறியது" நடுவர் மன்றம்! கர்நாடகத்தின் எல்லா வாதங்களையும் தவிடு பொடியாக்கிய நடுவர் மன்றம், காவிரியில் கிடைக்கும் மொத்த தண்ணார் 740 டி.எம்.சி. என்றும், அதில் 419 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது காவிரி நடுவர் மன்றம். இதில் கர்நாடக எல்லையில் உள்ள பில்லிக்குண்டு அளவீட்டுப்படி 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும். மீதியுள்ள 227 டி.எம்.சி. பில்லிக்குண்டுவிலிருந்து- காவிரி டெல்டா வரை கிடைக்கும் நீர்.

தேசியக் கட்சிகளுக்கும் தலை தூக்கிய "பிராந்திய பார்வை"!
இறுதி தீர்ப்பு வந்த பிறகும் கர்நாடக மாநிலம் அதை மதிக்கவில்லை. காவிரி நதி நீர் ஆணையம் அளிக்கும் உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் உடனடியாக நிறைவேற்றுவதில்லை. இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் கர்நாடகாவில் முதல்வராக இருந்தவர் பங்காரப்பா. அப்போது தமிழர்களுக்கு எதிராக பெரும் கலவரம் பெங்களூரில் அரங்கேறியது. பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது கோர்ட் அவமதிப்பு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்திலேயே நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு பிறகு தண்ணீரை திறந்து விட்டார். இப்போது முதல்வராக இருக்கும் ஜெகதீஷ் ஷட்டரோ அப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே உச்சநீதிமன்ற உத்தரவை அரைகுறை மனதுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்த 120 ஆண்டு கால காவிரி நதி நீர் பங்கீட்டுப் போராட்டத்தில் நடுவர் மன்றம், இடைக்காலத் தீர்ப்பு, காவிரி நதிநீர் ஆணையம், இறுதித் தீர்ப்பு என்று எவற்றையுமே ஒப்புக்கொள்ளாமல் அடம்பிடிக்கும் கர்நாடக மாநிலத்தில் மாறி மாறி தேசியக் கட்சிகளின் முதல்வர்களே பதவியில் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கட்சிகளுக்கு பரந்த பார்வை இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அது தேசியக் கட்சிகளுக்கும் "பிராந்திய பார்வையே" இருக்கிறது என்பது காவிரி பிரச்சினையில் கற்றுக் கொண்ட பாடம்.

கர்நாடக முதல்வரைப் பார்க்க மறுத்த பிரதமர்.. காத்திருந்து ஏமாந்தார் ஷெட்டர்!

Written By Unknown on Wednesday, October 10, 2012 | 10:27 AM

 Pm Coldshoulders Shettar Over Cauve டெல்லி வந்திருந்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் 2 நாட்களாக கடுமையாக முயற்சித்தும் அவரைப் பார்க்க மறுத்து விட்டாராம் பிரதமர் மன்மோகன் சிங். தனது உத்தரவையும் மதிக்காமல், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலையும் மதிக்காமல் தன்னிச்சையாக தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடக அரசு நிறுத்தியதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் ஷெட்டரைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 2 நாட்களாக பிரதமரைப் பார்க்க கடுமையாக முயற்சித்தும் ஷெட்டரால் முடியவில்லை. இதனால் கடும் ஏமாற்றத்துடன் ஷெட்டர் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
காவிரிப் பிரச்சினையை தற்போது கர்நாடகத்தில மோசமான அரசியல் பிரச்சினையாக்கி விட்டனர். அங்கு லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் நோக்கிலும், வாக்குகளைக் கவரும் வகையிலும் காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி அரசியல் செய்து வருகின்றன. நல்ல பெயரைத் தட்டிச் செல்வது யார் என்பதில் அவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
விவசாயிகள், பொதுமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் வகையில் அங்குள்ள காங்கிரஸ், பாஜக கட்சிகள் நடந்து கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்திற்குத் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடகா திடீரென நிறுத்தி விட்டது. இதனால் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்துள்ளாராம். இந்தப் பின்னணியில் கடந்த 3 நாட்களாக டெல்லியிலேய முகாமிட்டிருந்தார் ஷெட்டர். அப்போது பிரதமரை நேரில் சந்தித்து தங்களது நிலையை விளக்க அவர் திட்டமிட்டார். ஆனால் பிரதமர் அலுவலகத்திலிரு்நது அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. பிரதமர் பிசியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் பிரதமர், ஷெட்டரை சந்திக்க விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். தற்போது பெரும் சட்டச் சிக்கலை நோக்கி காவிரிப் பிரச்சினையை கர்நாடகா கொண்டு சென்று விட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடரப் போகும் அவமதிப்பு வழக்கில் மிகக் கடுமையான கண்டனத்தை கர்நாடக அரசு பெறப் போகிறது. அப்படிப்பட்ட நிலையில்,தான் அடுத்தடுத்து ஷெட்டரை சந்தித்தால், அது தேவையில்லாத பல்வேறு சிக்கல்களை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும், அரசியல் சாயம் பூசப்படும் என்பதால்தான் ஷெட்டரை சந்திக்க அஞ்சுகிறாராம் மன்மோகன்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு ஏற்படும் வரை காவிரி பாசன மாநில முதல்வர்கள் யாரையும் சந்திப்பதில்லை என்ற முடிவையும் மன்மோகன் சிங் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை என்பதை நேற்று ஷெட்டரே உறுதிப்படுத்தினார். நேற்று இரவு அவர் பெங்களூர் கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமரை சந்தித்து நிலையை விளக்க முற்பட்டேன். ஆனால் எனக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. பெங்களூரில் பல வேலைகள் காத்துள்ளதால் நான் பெங்களூருக்குக் கிளம்புகிறேன் என்றார்.
இதற்கிடையே, ஷெட்டருக்கு பிரதமர் நேரம் ஒதுக்காததற்கு கர்நாடக பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமரின் செயலைக் கண்டித்து பிரதமர் அலுவலகம் முன்பு ஷெட்டர் தர்ணா நடத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். மேலும் தன்னிலை விளக்க அறிக்கை போல ஒரு கடிதத்தை பிரதமருக்கு ஷெட்டர் அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். அதை ஏற்று ஷெட்டரும் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
இந்தக் கடிதத்தின் வாயிலாகவே அவர் காவிரி நீர் ஆணைய முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
அவதூறு வழக்கை சந்திக்கத் தயார் - ஷெட்டர்
இதற்கிடையே தமிழக அரசு தொடரும் அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்ட வரைமுறைக்கு உட்பட்டுத்தான் நாங்கள் நடந்து வருகிறோம். தண்ணீரை நிறுத்துவது என்பதும் கூட சட்டப்படியான முடிவுதான்.
இதற்கு மேலும் தண்ணீரைத் திறந்து விட வாய்ப்பே இல்லை என்று கோர்ட்டிலும் தெரிவித்து விட்டோம். தமிழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டால் அதை சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

என்னை எதிர்த்து போட்டியிட தயாரா?: மன்மோகனுக்கு நரேந்திர மோடி சவால்

Written By Unknown on Tuesday, October 9, 2012 | 11:14 AM


பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறிக் கொள்ளும் பிரதமர் மன்மோகன்சிங் தம்மை எதிர்த்து குஜராத் மாநில தேர்தலில் போட்டியிட தயாரா என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
 Narendra Modi Dares Prime Minister To Compete With Him தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நான் சவால்விடுகிறேன்.... குஜராத் மாநில பேரவைத் தேர்தலில் என்னை எதிர்த்து அவரால் போட்டியிட முடியுமா? நீங்களும் சாலைகள் அமைத்தீர்கள்.. நானும் சாலைகளைப் போட்டிருக்கிறென்.. நீங்கள் கால்வாய்களை உருவாக்கியிருக்கிறீர்கள்... நானும் அதை செய்திருக்கிறேன்.. இருவருமே மக்களுக்காக செய்திருக்கிறோம்.. வாருங்கள் இருவரும் போட்டியிடலாம்.. மக்கள் யாரை ஒப்புக் கொள்கிறார்கள் என பார்த்துவிடலாம்..
டெல்லியை ஆளும் சுல்தான்களே! குஜராத் மீது நீங்கள் சவாரி செய்த காலம் மலையேறிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது சோனியா காந்தி உறுதியளித்தார். ஆனால் நடந்ததா? இல்லையே! குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த சோனியா காந்தி, இந்த பணவீக்கம் பற்றி ஏன் எதுவுமே பேசவில்லை.. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்காக சோனியா காந்தி நாட்டு மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்றார் மோடி.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger