'புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை': மகிந்த - R News
Headlines News :
Home » » 'புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை': மகிந்த

'புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை': மகிந்த

Written By Unknown on Sunday, May 19, 2013 | 11:09 AM


இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது 'படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை' என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொது மக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
'மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்' என்றார் மகிந்த ராஜபக்ஷ.
தூக்கு மேடை வரை செல்லவேண்டியிருந்தவர்களுக்கு அரசாங்கம் மன்னிப்பளித்து புனர்வாழ்வு கொடுத்ததாகவும் 4000 தமிழர்களை சிவில் படையில் இணைத்துள்ளதாகவும் முப்படைகளிலும் சேர்ப்பதற்கு ஆட்கள் வரிசையில் நிற்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
போர் வெற்றிவிழாவில் மகிந்த ஊர்வலம்
படையினர் உயிர்த் தியாகம் செய்து வென்றெடுத்த நாட்டில் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட பறிப்பதற்கு இடம்கொடுக்கப் போதுமில்லை. நாட்டைப் பிரிக்க இடமளிக்கப் போவதுமில்லை என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.
போர் வெற்றிவிழாவில் மகிந்த ஊர்வலம்'1977-இல் ஆட்சிக்கு வந்த முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி (ஜே.ஆர். ஜெயவர்தன) மக்களின் பாதுகாப்பை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் வந்த ஜனாதிபதி (ரணசிங்க பிரேமதாஸ) பொலிஸ் அதிகாரிகள் 700 பேரை புலிகளிடம் அடிபணியச் சொன்னார், அவர் புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்தார். அவரையே நடுவீதியில் வைத்து புலிகள் கொன்று போட்டனர்' என்று ராஜபக்ஷ போர் வெற்றி விழாவில் கூறினார்.
அதேபோல், 'புலிகளின் தலைவருக்கு குண்டு துளைக்காத அங்கியைக் கொடுத்து சமாதானப் பேச்சுக்கு வருமாறு கையில் பிடித்துச் சென்ற இந்தியப் பிரதமரை தமிழ் நாட்டில் வைத்து புலிகள் கொன்று போட்டனர். அதேபோல போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்து நாட்டின் ஒரு பாகத்தைக் காட்டிக் கொடுத்தவர்களால் கொழும்பில் குண்டு வெடிப்பதை தடுக்க முடியாமல் போனது' என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் வடக்கில் இயங்கமுடியாமல் அஞ்சி கொழும்பில் தஞ்சமடைந்திருந்த 12 அரசியல் கட்சிகள் வரை, இன்று அங்குபோய் அரசியலில் ஈடுபடுமளவுக்கு சுதந்திரம் உள்ளது என்றும் மகிந்த மேலும் கூறினார்.

Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger