துப்பாக்கி- விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ரசிகர்களுக்கும் தான். - R News
Headlines News :
Home » » துப்பாக்கி- விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ரசிகர்களுக்கும் தான்.

துப்பாக்கி- விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ரசிகர்களுக்கும் தான்.

Written By Unknown on Tuesday, November 13, 2012 | 2:09 PM


துப்பாக்கி படம் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளை எகிர வைத்திருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு ஸ்கெப்டிசத்தையும் கூடவே உருவாக்கியிருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் 7ஆம் அறிவில் கதை நன்றாக இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டது, அதன் பின் ஒரு அவரசரமாய் இந்த துப்பாக்கியை ஆரம்பித்தது இதெல்லாம் பார்த்தபோது ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
 படம் வழக்கமான விஜய் பாடலுடன் ஆரம்பிக்கிறது. ராணுவத்தில் கேப்டனாய் இருக்கும் விஜய் 40 நாள் லீவில் வீட்டுக்கு வருகிறார். வீடு மும்பையில். ரயிலை விட்டு இறங்கிய விஜயை அப்படியே யூனிஃபார்மைக்கூட கழட்டாமல் காஜல் அகர்வாலை பெண் பார்க்கும் படலம். அமைதியாய் ஆரம்பித்து பின் இவர் பிடிக்கலை என காரணங்கள் சொல்வதும் பின் அந்த காரணங்களே காலியாக விஜய் ஜொள்ளு விட்டு அவர் பின்னால் போவதும், அவர் பிடிக்கலை என சொல்வதும் என கலகலப்பான காமெடி காதல் கதையாகி ரசிக்க வைக்கிறது.
ஆனால் மனதில் லேசாய் என்னடா என்னமோ ஆக்சன் படம்னு நினைச்சு வந்தோம் என தோனும்போதே பஸ்ஸில் பிக்பாக்கெட் காரனை செக் பண்ணும்போது குண்டு வெடிக்க, தப்பி ஓடிபவனை துரத்திப்பிடிக்கிறார் விஜய். அவன் தான் குண்டு வைத்தவன். போலிஸில் இருந்து அவன் தப்ப கதை சூடுபிடிக்கிறது. தான் ஆர்மி மட்டுமில்லை DIA எனப்படும் டிபென்ஸ் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி அதிகாரியும் தான் என விஜய் அந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களை வலை வீசிக் கண்டுபிடிப்பதும், அந்த தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களை, அவர்களின் 12 இடங்களில் குண்டு வெடிக்கும் பிளானை விஜய் எப்படி தன் ஆர்மி கூட்டாளிகளுடன் முறியடிக்கிறார் என்பதுடன் இடைவேளாயாகிறது.
அந்த எபிசோடே ஒரு பரபரப்பான ஆக்சன் ட்ராமா. அதன் உச்சகட்டமாய் விஜய் சொல்லும் அவங்களுக்கு மட்டும் தான் ஒரே நேரத்துல பல இடங்கள்ல அட்டாக் பண்ண தெரியுமா? நமக்கும் தெரியும்னு காட்டுவோம் என்ற படி சுடும்போது தியேட்டரில் கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாகிறது.
கடுப்பான தீவிரவாத கமாண்டர் விஜய்யிடம் உன்னைக் கண்டுபுடிச்சு கொல்லுவேன் என சேலஞ்ச் பண்ணுவதும், அவன் எப்படி விஜய் மற்றும் அவரது அணியினரைக் கண்டுபிடிக்கிறான்.. அதன் பின்விளைவுகள் என்ன என்பது படத்தின் மீதிப்பாதி.
சும்மா சொல்லக்கூடாது. முருகதாஸ் IS BACK WITH A BANG! ஒரு ஆக்சன் ஹீரோவாய் விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படமாய் இந்த துப்பாக்கி அமையும். அந்த அளவுக்கு உழைப்பு திரைக்கதையிலும், மேக்கிங்கிலும்.
தன் அணியினரின் தங்கைகளை கடத்தியிருக்கும் கும்பலை விஜய் கண்டுபிடிக்கும் எபிசோட் ஆக்சன் சீக்வென்ஸை எப்படி எடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாய் இருக்கும். அந்த அளவுக்கு மெருகூட்டப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சியிலும் கைதட்டல் அடங்க வெகுநேரமாகியது. 
போக்கிரியில் விஜய்க்கு போலிஸ் ட்ரெஸ் கொஞ்சம் கூட பொருந்தாததால் இப்போது அவர் ராணுவ வீரர் என்ற போது திக்கென்றுதான் இருந்தது. படத்தில் அவ்வளவாய் யூனிபாஃர்ம் காட்சிகள் இல்லை என்பது நிம்மதி. ஆனால் விஜய் மிக இயல்பாய் பொருந்தியிருக்கிறார் இந்த ரோலில். ஆக்சனுக்கான உடல் வாகும், மிடுக்கும் என ஆச்சர்யப்படுத்துகிறார். 
இந்தப் படம் ஒரு முழுக்க முழுக்க சீரியஸ் ஆக்சனுக்கான கதை, களம் கொண்டது. ஆனால் அதற்குள் இயல்பாய் ஒரு கலகலப்பான காதல் கதையை முருகதாஸால் மட்டும்தான் இவ்வளவு சிறப்பாய் கலக்க முடியும். விஜய்கே உரித்தான டைமிங் காமெடிகளும் படம் முழுவதும் தெளிக்கப்பட்டிருப்பது எல்லாவித ஆடியன்ஸையும் உள்ளே இழுப்பதை உறுதிசெய்கிறது. 
ஒரு காட்சியில் விஜய்யின் பெட்ரூமில் ஒரு கஃபோர்டில் தீவிரவாதி கட்டப்பட்டிருக்க, இன்னொரு கஃபோர்டில் காதலி ரொமான்டிக் மூடில் ஒளிந்திருப்பார். இதுவே படத்தின் ஜானர் மிக்ஸிங்கு சிறந்த உதாரணம். 
பொதுவாய் விஜய் படத்தில் விஜயை கலாய்க்க மாட்டார்கள் அல்லது அனுமதி கிடைக்காது. ஆனால் இதில் ஒரு காட்சியில் சத்யன் காஜலிடம் கேட்பார், விஜயைக் காட்டி, ‘இவனத்தான் நீ கட்டிக்கப்போறியா? பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என?’
இன்னொரு காட்சியில் விஜய்யும் காஜலும், இன்டெர்நெட்டில் விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை விஜய்க்கு கல்யாணம் செய்ய முயன்றது தடைபட்டதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பார்கள். காஜல் விஜய்யிடம் நீ ஏன் சிரிச்சே எனக் கேட்க.. ‘அந்த மாட்டர்-டேந்து நான் எஸ்கேப் ஆயிட்டேன்ல அத நினைச்சு சந்தோத்துல சிரிச்சேன். நீ ஏன் சிரிச்சே என கேட்ட, காஜல் ‘அந்த மாட்டரே உன்ன வேண்டாம்னு சொல்லிருச்சே அத நினைச்சு சிரிச்சேன்’ என்பார். ஆச்சர்யமாய் ரசிக்க முடிகிறது. 
ஸ்லீப்பர் செல்களை ஏதோ ஒரே ஒரு தலைவனை மட்டுமே நம்பி இருப்பதாய் காட்டியிருப்பது குறை. ஆனால் பெரிதாய் உறுத்தவில்லை.
கூகுல் பாடலில் காஜல் அகர்வாலின் அழகுக்கு நட்சத்திர நடிகர்களும் ரசிகர்களாகிவிடுவார்கள். 
பட முடிவில் வரும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய பாடல் முருகதாஸ் மிலிட்டரி ஆட்களிக்கு வைக்கும் சல்யூட்.
இந்தியில் கஜினி வெற்றிக்குப் பின் ஏன் இவர் இன்னும் இந்திப்படம் பண்ணவில்லை என்ற கேள்விக்கு பதில் இந்தப் படம் தான். ஆம் அடுத்து இந்தப் துப்பாக்கி இந்திக்குப் போகும் போது அது இந்திக் கஜினியின் ரெகார்ட்களையும் உடைக்கும். 
துப்பாக்கி – விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை. எல்லா ஆக்சன் பட ரசிகர்களுக்கும் தான்.

Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. R News - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger